அதிமுகவின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய முன்னாள் அமைச்சர்கள் 10 பேர்களைக் கொண்ட ஆய்வுக்குழுவை நியமித்துள்ள கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி, அது தொடர்பான அறிக்கையை டிச.7-ம் தேதிக்குள் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக கிளை, வார்டு, வட்டக் கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்து, அவற்றின் பணிகளை மேம்படுத்துவது குறித்தான கருத்துகளைப் பெற்றிடவும், புதுப்பிக்கப்பட்ட கட்சி உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் முழுமையாக கட்சி உறுப்பினர்கள் அனைவரிடமும் சென்றடைந்ததா என்பதை உறுதி செய்து, அதன் விவரங்களை அறிக்கையாக அளிப்பதற்காகவும், `கள ஆய்வுக் குழு’ அமைக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் அமைச்சர்களான கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, அமைப்பு செயலாளர்கள் பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, அ.அருணாசலம், மகளிரணி செயலாளர் பா.வளர்மதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேற்கண்ட குழுவினர், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று கள ஆய்வு செய்து, அதன் விவரங்களை டிச.7-ம் தேதிக்குள் அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இக்குழு, அந்தந்த மாவட்டங்களுக்கு வரும்போது, மாவட்ட செயலாளர்கள் அனைத்து இடங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்வதற்கான முழு ஏற்பாடுகளையும் செய்திட வேண்டும். கழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த இப்பணியை, முழு கவனத்துடன் செய்திடுமாறு மாவட்ட செயலாளர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.