அதிமுக தொழிற்சங்கப்பேரவை சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம்: இபிஎஸ் அறிவிப்பு | May Day celebration meeting on behalf of ADMK Trade Union – EPS 

1358789.jpg
Spread the love

சென்னை: அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டங்கள் நடந்திடவேண்டும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: உழைக்கும் வர்க்கம் உரிமை பெற்ற திருநாள் மே தினம். ஓய்வு என்பதும், மகிழ்வு என்பதும் உழைக்கும் தொழிலாளர்களுக்கும் உண்டு என்று உரிமைக் குரல் எழுப்பி அதில் வெற்றி பெற்ற நாள் மே தினம். அந்த வெற்றியைத் தொடர்ந்து, உழைக்கும் தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் அனைத்து வளங்களும் பெற்று சிறப்படைய வேண்டும்; உலக முன்னேற்றத்திற்காக தங்கள் ரத்தத்தை வியர்வையாக்கி உழைக்கும் அனைத்துத் தொழிலாளர்களின் வாழ்விலும் நல்வாழ்வு தீபம் ஏற்றப்பட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு உலகெங்கும் மே முதல் நாள் மே தினமாக, சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

மே தினக் கொண்டாட்டங்கள் மூலம் தொழிலாளர்களின் பெருமையை உலகிற்கு பறை சாற்றுவதோடு நின்றுவிடாமல், உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகள் உலகெங்கும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், வரலாற்றுச் சிறப்பு மிக் மே தினத்தைக் கொண்டாடும் வகையில், கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில், அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும், வருகின்ற மே 1ம் தேதி வியாழக்கிழமை மே தின விழா பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள் மற்றும் அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் கழக நாளிதழில் வெளியிடப்படும். கழக சட்டப்பேரவை உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர்களும், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகளும், தாங்கள் சார்ந்த மாவட்டங்களில் நடைபெறும் மே தின விழா பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.

மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்கள் மற்றும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்களுடனும், எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு,

வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகளுடனும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளுடனும் இணைந்து, சிறப்புப் பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டு, மே தின விழா பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி, அதன் விபரங்களை தலைமைக் கழகத்திற்கும், கழக நாளேடான நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழுக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.

மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும்,மே தின விழா பொதுக்கூட்டங்கள் சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை, சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் உடனிருந்து செய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *