மேட்டூர்: எடப்பாடியில் அதிமுக – பாஜக கூட்டணிக்கு எதிராக பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி திமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டபேரவை தேர்தலை சந்திக்க உள்ளதாகவும், பாஜகவும், அதிமுகவும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். இந்த கூட்டணி குறித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். அதிமுக – பாஜக கூட்டணி எதிராக, சேலம் மாவட்டம் எடப்பாடியில் திமுகவினர் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி திமுக-வினர் பிரச்சாரத்தில் இன்று (ஏப்.19) ஈடுபட்டனர்.
எடப்பாடி திமுக நகராட்சி தலைவர் பாஷா தலைமையில் பேருந்து நிலையம் பகுதிகளில் திரண்ட தி.மு.க நிர்வாகிகள் குவிந்தனர். பின்னர், அப்பகுதியில் சாலையோரத்தில் கடை நடத்தி வரும் வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோரிடம் அதிமுக -பாஜக மத்திய மாநில ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலத்தில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வு, சிஏஏ சட்டம், புதிய வேளாண் சட்டம், உதய் மின் திட்டம், புதிய குடியுரிமை சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களுக்கு துணை நின்ற அதிமுகவிற்கான எதிரான கருத்துக்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி கூட்டணிக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இந்தி திணிப்பு, நிதிப்பகிர்வில் பாரபட்சம், கல்வி நிதி மறுப்பு, தொகுதி மறுசீரமைப்பு என பாஜக அரசின் அனைத்து துரோங்களும் துணை நின்ற கூட்டணி அமைத்துள்ள அடிமை அதிமுகவின் முகத்திரை கிழித்து விரட்டி அடிப்போம் எனவும், வஞ்சக பாஜக – துரோக அதிமுக கூட்டணிடமிருந்து தமிழ்நாட்டை பாதுகாப்போம் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.