அதிமுக பொதுச் செயலாளர் தேர்வை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு: உயர் நீதிமன்றம் நிராகரித்து உத்தரவு | HC dismisses plea against Edapadi Palanisamy’s appointment as ADMK GS

1375358
Spread the love

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்வை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி தாக்கல் செய்திருந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் திண்டுக்கல்லை சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை நிராகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, கடந்த ஜூலை மாதம் சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதி பி.பி.பாலாஜி விசாரித்தார். விசாரணையின் போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில், 2018-ம் ஆண்டிலிருந்து சூர்ய மூர்த்தி கட்சியின் உறுப்பினராக இல்லை. கட்சியில் உறுப்பினராக இல்லாத ஒருவர் கட்சி விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப முடியாது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளரை எதிர்த்து சூர்ய மூர்த்தி போட்டியிட்டதாக வாதிடப்பட்டது.

சூர்ய மூர்த்தி தரப்பில், கட்சி விதிப்படி சூரியமூர்த்தி, கட்சியின் உறுப்பினராக தொடர்கிறார். பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் விருப்பத்தை மீறி கட்சி விதியில் மாற்றம் செய்யப்பட்டது. பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கட்சி விதியை மாற்ற முடியாது என வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார்.

இன்று, இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி பாலாஜி, எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்று, சூரியமூர்த்தியின் வழக்கை நிராகரிக்க மறுத்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

அதேபோல, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி தாக்கல் செய்திருந்த வழக்கையும் நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *