ஓராண்டு கால அரசியல் இடைவெளிக்குப் பிறகு, நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள், இன்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
அதன் பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய பிறகு, அரசியலில் இருந்து ஒருபோதும் நான் விலகவில்லை. அ.தி.மு.க-வைத் தேர்வு செய்ததற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன.

ஒன்று… ஒரு சாதாரணக் குடும்பத்தில் இருந்து வந்தவர் கூட, உழைப்பால் உயர்ந்த பதவியை எட்ட முடியும் என்பதற்கான சான்றாக அ.தி.மு.க-வின் தலைமையாக திகழ்கிறார். இத்தகைய ஜனநாயகச் சூழல் அ.தி.மு.க-வில் மட்டுமே உள்ளது.
இரண்டு…ஒரு தமிழருடைய தலைமையின் கீழ் இயங்க வேண்டும் என்ற மன உறுதியோடு இருந்ததால் அ.தி.மு.க-வை தேர்வு செய்தேன். எளிய மக்களுக்கான அரசியல் வாய்ப்பை இந்த அமைப்பு உருவாக்கும் என நம்புகிறேன்.
கடந்த ஓராண்டு காலம்..!
கடந்த ஓராண்டு காலம் நான் அரசியலில் இருந்து விலகி இருந்ததாகச் சொல்ல முடியாது. மக்கள் களத்தில் தொடர்ந்து இருந்தேன். விவசாயப் போராட்டங்கள், கடலோர மக்கள் போராட்டங்கள் என களப்பணியில் இருந்தேன். அதேசமயம், கடந்த ஆறு ஆண்டுகளாக அரசியலில் தீவிரமாக இயங்கியதால், எனக்குச் சற்றே ஓய்வு தேவைப்பட்டது. இரண்டரை வயதிலிருந்து என் குழந்தையைப் பிரிந்துதான் அரசியல் பணிகளில் இருந்தேன். அந்தப் பிள்ளையோடு கொஞ்ச காலம் செலவிட வேண்டும் என்ற தாயின் கடமைக்காகவே இந்தச் சிறிய இடைவெளியை எடுத்துக்கொண்டேன்.

திராவிடக் கட்சிகளை விமர்சித்த நான், இப்போது அதில் இணைந்தது குறித்துக் கேட்கிறீர்கள். நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியே வந்த பிறகு, என் உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்காகவும், என் இன மக்களுக்காகவும் குரல் கொடுக்க ஒரு தளம் தேவைப்பட்டது. இந்த முடிவை நான் தனித்து எடுக்கவில்லை; என்னுடன் பயணிக்கும் மக்களுடன் கலந்து ஆலோசித்தே எடுத்தேன். பா.ஜ.க-வில் இணையப்போவதாக வந்த தகவல்கள் வெறும் வதந்திகளே.
இன்றைய அரசியல் சூழலில் மக்கள் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு எனப் பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இந்த ஏமாற்ற நிலையில் இருந்து மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். 2026 தேர்தல் அதற்கான விடையைத் தரும். தி.மு.க-வின் நான்கரை ஆண்டு காலச் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதை வரும் தேர்தலில் மக்கள் உரக்கச் சொல்வார்கள்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்குத் தண்டனைகள் கடுமையாக்கப்படாததே குற்றங்கள் தொடரக் காரணம். விசாரணை துரிதப்படுத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை, சிறுமிகளைச் சீரழிப்பவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதில் எந்தத் தவறும் இல்லை. அப்போதுதான் மீண்டும் அந்தத் தவறைச் செய்ய மற்றவர்களுக்குப் பயம் வரும்.
நான் இன்று நேற்று அ.தி.மு.க-விற்கு வரவில்லை. 2010-லேயே அ.தி.மு.க-வில் மாவட்டப் பொறுப்பில் இருந்தவள்தான் நான். அப்போது நாகை மாவட்டச் செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் என்னை ஒரு பட்டிமன்றத்தில் பார்த்துவிட்டு கட்சிக்கு அழைத்து வந்தனர். பின்னர் குழந்தைப் பேறு காரணமாக அமைதியானேன். இப்போது மீண்டும் வந்துள்ளேன். எனக்கு என்ன பொறுப்பு வழங்க வேண்டும் என்பதை கட்சித் தலைமை முடிவெடுக்கும்.” என்றார்.