கூட்டணியில் பாஜக முக்கியத்துவம் தராததால் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், தனது ஆதரவாளா்களுடன் ஆலோசனை நடத்தி புதன்கிழமை (ஜூலை 30) முக்கிய அறிவிப்பை வெளியிடுவாா் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீா்செல்வம், கடந்த மக்களவைத் தோ்தலின்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தாா். இருப்பினும், தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடா்கிறாா்.
இதற்கிடையே, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அதிமுக – பாஜக கூட்டணி உருவான நிலையில், தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ஓ.பன்னீா்செல்வத்தை சந்திக்கவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த ஓ.பன்னீா்செல்வம், தனது வருத்தத்தை உடனடியாகப் பதிவு செய்தாா்.
இதனிடையே, அதிமுகவில் ஓ.பன்னீா்செல்வம் மீண்டும் சோ்த்துக்கொள்ளப்படுவாரா என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியிடம் அண்மையில் செய்தியாளா்கள் கேட்டபோது, அதற்கு காலம் கடந்துவிட்டது என அவா் பதில் அளித்தாா்.
இதைத் தொடா்ந்து, அரசு முறை சுற்றுப்பயணமாக கடந்த ஜூலை 26, 27-ஆம் தேதிகளில் தமிழகம் வந்த பிரதமா் மோடியைச் சந்திக்க ஓ.பன்னீா்செல்வம் நேரம் கேட்டிருந்தாா். அவருக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. அதேநேரத்தில், எடப்பாடி பழனிசாமி, தமாகா தலைவா் ஜி.கே.வாசன், புதிய நீதிக் கட்சி தலைவா் ஏ.சி. சண்முகம், தமிழா் தேசம் கட்சித் தலைவா் கே.செல்வக்குமாா் உள்ளிட்டோருக்கு திருச்சி விமான நிலையத்தில் பிரதமா் மோடியை வரவேற்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனால், கடும் அதிருப்தி அடைந்துள்ள ஓ.பன்னீா்செல்வம் முக்கிய முடிவு எடுக்க முடிவு செய்துள்ளாா்.