அதிருப்தி திமுக, திணறும் தேமுதிக; உற்சாக அதிமுக – குடியாத்தம் தொகுதி களம் எப்படி?

Spread the love

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தனித்தொகுதியில், அ.தி.மு.க வேட்பாளராக பரிதா புருஷோத்தமன் களமிறங்கியுள்ளார். இவர், அ.தி.மு.க-வில் பேரணாம்பட்டு ஒன்றிய இணைச் செயலாளராகவும் கட்சிப் பொறுப்பு வகிக்கிறார். கடந்த 2021 தேர்தலின்போதும், அ.தி.மு.க சார்பாக பரிதா புருஷோத்தமன் போட்டியிட்டார். அப்போது, சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில்தான் அவருக்கான வெற்றி வாய்ப்பு தவறியது. இந்த முறை குடியாத்தம் தொகுதி அ.தி.மு.க-வுக்குச் சாதகமாக இருப்பதால், தெம்போடு களம் காண்கிறார் பரிதா புருஷோத்தமன்.

பரிதா புருஷோத்தமன்

பேரணாம்பட்டு லயன்ஸ் கிளப் தலைவர், பெண்களுக்கான தன்னார்வத் தொண்டு அமைப்பான இன்னர்வீல் துணைத் தலைவர் என தொகுதி மக்களிடம் பழக்க வழக்கத்தில் இருக்கும் பரிதா எம்.ஏ பொருளாதாரம் மற்றும் எம்.எட் முதுகலைப் பட்டம்பெற்றவர். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் பேசக்கூடியவர். களத்தில், தனக்கான வரவேற்பு பிரகாசமாக இருப்பதால், பரிதா புருஷோத்தமன் உற்சாகமாக மக்களைச் சந்தித்து வருகிறார்.

எதிர்முனையில், தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க-வுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. கடந்த முறை தி.மு.க நேரடியாகப் போட்டியிட்டதால், களம் கடுமையாக இருந்தது. `இந்த முறை அப்படியிருக்க வாய்ப்பில்லை’ என உடன்பிறப்புகளே பொருமித்தள்ளுகிறார்கள். தே.மு.தி.க சார்பாக பிரதாப் என்பவர் களமிறக்கப்பட்டுள்ளார். காட்பாடி கழிஞ்சூர் பகுதியைச் சேர்ந்த பிரதாப் குடியாத்தம் தொகுதி மக்களுக்கு பரிச்சயம் இல்லாதவர்.

தே.மு.தி.க-வுக்கு குடியாத்தம் தொகுதிக்குள் மட்டுமல்லாமல், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலேயே கட்டமைப்புக் கிடையாது. பிரதாப்பின் பின்னணியும் `ரியல் எஸ்டேட்’ தொழில் செய்கிறார் என்பதை தவிர, மக்களைக் கவரும் வகையில் சொல்ல ஒன்றுமில்லை.

பிரதாப்

தி.மு.க-வில், சிட்டிங் எம்.எல்.ஏ அமலு விஜயன், மாவட்ட துணைச் செயலாளர் பிரபாத் குமார், முன்னாள் எம்.எல்.ஏ ஜெயந்தி பத்மநாபன் என பலரும் சீட் எதிர்பார்த்திருந்த நிலையில், தே.மு.தி.க-வுக்குத் தொகுதி தாரைவார்க்கப்பட்டதால் உடன்பிறப்புகள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். மேலும், முன்பின் தெரியாத கூட்டணி கட்சி நபருக்காக நாம் ஏன் களப்பணி செய்ய வேண்டும்? என்றும் ஒதுங்கி நிற்கின்றனர். இதனால், செய்வதறியாமல் திணறிப்போய் இருக்கிறார் பிரதாப்.

இதனால் இலை தரப்பு உற்சாகமாக களத்தில் வலம் வருகிறதாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *