அத்திக்கடவு – அவிநாசி திட்டம் இன்று தொடக்கம்: கோவை, திருப்பூர், ஈரோடு மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறுகிறது | Cm stalin launches athikadavu avinashi project

1296664.jpg
Spread the love

திருப்பூர்: கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவான அத்திக்கடவு – அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தைமுதல்வர் ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.

பவானி ஆற்றின் உபரி நீரை பயன்படுத்தி கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள 1,045 குளம், குட்டைகளை நிரப்பும் அத்திக்கடவு – அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டப் பணியை தொடங்க பல்வேறு தரப்பினரும் அரசுக்கு வலியுறுத்தினர்.

இதையடுத்து, கடந்த 2019 டிசம்பர் மாதம் தமிழக நீர்வளத் துறை சார்பில் அத்திக்கடவு – அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் தொடங்கப்பட்டது. திட்டப் பணிக்காக கடந்த 2021-ம் ஆண்டு ரூ.90 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது. மொத்தம் ரூ.1,747 கோடி மதிப்பில் திட்டப் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில், அத்திக்கடவு – அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து காணொலி மூலம் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கிறார்.

இதுகுறித்து திட்ட அதிகாரிகள் கூறும்போது, “1,045 குளம், குட்டைகளில் முன்னரே வெள்ளோட்டம் பார்க்கப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் முடிந்துவிட்டன. மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும்நீலகிரி மலைக்காடுகளில் பெய்யும்மழையால் பவானி ஆற்றில் தேவைக்கு ஏற்ப தண்ணீர் உள்ளது.இத்திட்டத்தின் கீழ் 945 கி.மீ. தூரத்துக்கு பிரதான குழாய்களும், கிளை குழாய்களும் பதிக்கப்பட்டுள்ளன. இதில் 1,045 குளம் குட்டைகளுக்கு ஆண்டுக்கு 1.5 டிஎம்சி தண்ணீர் நிரப்பப்பட உள்ளது” என்றனர்.

அத்திக்கடவு – அவிநாசி திட்டபோராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம் கூறும்போது, “இத்திட்டத்துக்காக பல்வேறு தொடர் போராட்டங்கள் நடத்தியுள்ளோம். இத்திட்டப்பணி தொடங்கப்படும் 17-ம் தேதி (இன்று) 1,400 குளம், குட்டைகளிலும் சிறப்பு வழிபாடு நடத்துகிறோம். விடுபட்ட குளம், குட்டைகளையும் இணைத்தால், திட்டம் முழுமையடையும்” என்று தெரிவித்தார்.

அண்ணாமலை அறிவித்த போராட்டம் வாபஸ்: அத்திக்கடவு – அவிநாசி திட்டம் தொடங்கப்படுவதால், பாஜக அறிவித்த போராட்டம் கைவிடப்படுவதாக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆட்சிக்கு வந்து கடந்த 38 மாதங்களாக, பொதுமக்கள், விவசாயிகளின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திமுக அரசு தாமதம் செய்தது. இந்த நிலையில், அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற தவறினால், ஆகஸ்ட் 20 முதல் தமிழக பாஜக சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தோம். எங்கள் முக்கிய கோரிக்கை நிறைவேறியுள்ளதால், போராட்டம் கைவிடப்படுகிறது.

பாஜக வலியுறுத்தலின் பேரில், மக்களின் 70 ஆண்டுகால கனவு நிறைவேறுவது மகிழ்ச்சி. இத்திட்டத்துக்கு குழாய் பதிக்க நிலம் கொடுத்த விவசாயிகளுக்கான இழப்பீடும் உடனே அறிவிக்கப்பட வேண்டும்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *