"அந்த மாணவி சொல்லி முடிக்கும்போதே, சிவகார்த்திகேயன்தான் கண்ணில் வந்தார்!" – இயக்குநர் இரா. சரவணன்

Spread the love

தணிக்கை சான்றிதழ் சிக்கல் தடையைத் தாண்டி கடந்த 10-ஆம் தேதி சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இப்படம் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 25வது திரைப்படம்.

ரிலீஸுக்கு முந்தைய நாளின் பரபரப்பிலும் தந்தையை இழந்த ஒரு பெண்ணின் கல்விச் செலவிற்காக உதவியிருக்கிறார் சிவகார்த்திகேயன். இது குறித்து இயக்குநர் இரா. சரவணன் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

Parasakthi - SK
Parasakthi – SK

அந்தப் பதிவில் அவர், “தம்பி சிவகார்த்திகேயனை எத்தனையோ முறை பார்த்தாலும், பேசியிருந்தாலும் அவரோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டது இல்லை.

இந்த முறை எடுக்கத் தோன்றியது. அதற்குக் காரணம் இருந்தது. ‘சங்காரம்’ நாவல் குறித்து அறிந்திருந்த சிவா, “எனக்கும் அறிவு இருக்குண்ணே… நாங்களும் புக் படிப்போம்” எனக் குறுந்தகவல் அனுப்பி என்னைச் சீண்டியிருந்தார். நேற்று ஒரு தனித்திரையிடல் நிகழ்விற்கு சிவா வருவதாகச் சொல்ல, சந்திக்கப் போயிருந்தேன்.

‘பராசக்தி’ ரிலீஸ் நேரம்… சென்ஸார் உள்ளிட்ட பல சிக்கல்கள். அந்த நேரத்தில் எனக்கு ஓர் அழைப்பு. கேட்கையிலேயே நெஞ்சு அடைத்து மீண்டது. ஒரு கல்லூரி மாணவியின் கண்ணீர்.

“செமஸ்டர் ஃபீஸ் கட்ட இன்னும் இரண்டு நாட்களே அவகாசம் சார்” அந்த மாணவி சொல்லி முடிக்கும்போதே, சிவகார்த்திகேயன்தான் கண்ணில் வந்தார். ஆனால், ‘பராசக்தி’ ரிலீஸ் நேரமாயிற்றே, வேறு ஆட்களை அணுகலாம் எனப் பத்துக்கும் மேற்பட்ட நண்பர்களுக்கு போன் பண்ணியும் பலனில்லை.

தம்பி சிவாவிற்கே குறுந்தகவல் அனுப்பினேன். மின்னலென தம்பி நவனீதன் தொடர்புக்கு வந்தார். “நாளைக்கு படம் ரிலீஸ்ணே… இப்போ சொல்றீங்களே” என்றவர் அந்த மாணவியின் எண் வாங்கி, பேசி, டி.டி எடுத்து கல்லூரிக்கு அனுப்பி இரவு 11:30 மணிக்கு எனக்கு போன் பண்ணினார்.

உதவி கேட்ட நானே தூங்கிவிட்டேன். அந்த நேரத்தில் நவனீதன் அழைத்து ஃபீஸ் கட்டிவிட்ட விவரத்தைச் சொன்னார். “நன்றி அண்ணா…” என ஃபீஸ் கட்டப்பட்ட விவரத்துடன் அந்த மாணவி அனுப்பிய குறுந்தகவலும் வந்திருந்தது.

மிக நெருக்கடியான நேரத்தில் சட்டென உதவிய சிவகார்த்திகேயனுடன் முதல் முறையாய் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பினேன். “அண்ணே…” என என் கைகளை அழுந்தப் பிடித்துக் கொண்டார் சிவா. அவர் கைகளின் வழியே அந்தக் குடும்பத்தின் ஆத்மார்த்த நன்றியைக் கடத்தினேன்.

நெகிழ்ந்திருந்த சிவாவிடம், ‘சங்காரம்’ நாவல் கொடுக்க விரும்பாமல், நிறைவோடு கிளம்பினேன். சிவா செய்தது கோடி ரூபாய் உதவி அல்ல.

ஆனால், அடுத்த நாள் பட ரிலீஸை வைத்துக்கொண்டு ஒருவரின் கவலை குறித்துக் கேட்கிற மனம் நிச்சயமாகக் கோடிக்குச் சமம்!” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *