கேரள சர்வதேச திரைப்பட விழாவில் (IFFK) குறிப்பிட்ட 14 படங்களை திரையிடுவதற்கு அனுமதியை மறுத்திருக்கிறது மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம்.
இதனால் திரைப்பட இயக்குநர்களும், கேரள திரைப்பட விழாவின் ஒருங்கிணைப்பாளர்களும் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
டிசம்பர் 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை திருவனந்தபுரத்தில் இத்திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. பாலஸ்தீனத்தைப் பற்றி எடுக்கப்பட்ட சில திரைப்படங்களையும் இங்கு திரையிட அனுமதி மறுத்திருக்கிறார்கள்.

“பாலஸ்தீன் 36′, ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் காஸா’, ‘வஜிப்’ ஆகிய திரைப்படங்களுடன் 1925-ம் ஆண்டு வெளியான ‘பேட்டில்ஷிப் போடெம்கின்’ திரைப்படத்தையும் இந்த நிகழ்வில் திரையிட அனுமதி மறுத்திருக்கிறார்கள்.
அத்தோடு ‘சந்தோஷ்’, ‘பீஃப் (ஸ்பானிஷ் திரைப்படம்)’ உள்ளிட்ட சில திரைப்படங்களுக்கும் அனுமதி மறுத்திருக்கிறார்கள்.
இப்படியான திரைப்பட விழாக்களில் படங்களைத் திரையிட தணிக்கைச் சான்றிதழ் தேவையில்லை என்றாலும் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திடமிருந்து அனுமதி பெற வேண்டும்.
இத்தனை படங்களுக்கு அனுமதி தர மறுப்பு தெரிவித்திருப்பதால் விழாவின் அட்டவணை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஒருங்கிணைப்பாளர்கள் கவலை தெரிவித்திருக்கிறார்கள்.