அனைத்து சாதியினரும் இன்னும் அர்ச்சகராக முடியவில்லை: முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் கருத்து | Former Judge Hariparanthaman says not all castes have been able to become priests yet

1378845
Spread the love

சென்னை: சாதிய ஆதிக்கத்துக்கு எதிராக பல்வேறு சட்டங்கள், அரசாணைகள் இயற்றப்பட்டாலும் கூட, அனைத்து சாதியினரும் இன்னும் அர்ச்சகராக முடியவில்லை என்று சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் தெரிவித்தார். வழக்கறிஞரும், சமூகப் போராளியுமான பி.வி.பக்தவச்சலத்தின் 18-வது ஆண்டு நினைவு கருத்தரங்கம் பிவிபி அறக்கட்டளை சார்பில் சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.

‘ஆணவக் கொலைகளும், சாதியை அழித்தொழித்தலும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பங்கேற்றவர்கள் பேசியதாவது:

சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன்: இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பும், பின்பும் நீதிமன்றங்கள் ஆதிக்க சாதியை சார்ந்த கருத்துகளை முன்வைத்து, ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு எதிரான நிலையையே பெரும்பாலும் எடுத்து வந்துள்ளன. தமிழகத்தில் சாதிய ஆதிக்கத்துக்கு எதிராக பல்வேறு சட்டங்கள், அரசாணைகள் இயற்றப்பட்டாலும் கூட, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணை இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை.

அர்ச்சகர்களுக்கான தகுதிகளைப் படித்து, முறையாக பயிற்சி பெற்ற பிறகும் அனைத்து சாதியினரும் இன்னும் அர்ச்சகராக முடியவில்லை. சாதிய ஒழிப்புக்கு எதிரான இந்த சட்டப் போராட்டத்தில்பிவிபி போன்ற அறக்கட்டளைகள் மக்கள் மன்றங்களிலும் தங்களது பணியை சிறப்பாக செய்ய வேண்டும்.

உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன்: சாதியக் கொலைகளுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எனினும், அதுமட்டுமே சாதியக் கொலைகள், சாதியை ஒழி்த்துவிடாது.

சாதி ஒழிப்பு முன்னணி ஒருங்கிணைப்பாளர் ரமணி்: சாதியக் கொலைகள் தொடர்பான பல்வேறு சம்பவங்களில் பாதிக்கப்பட்டோரை சந்தித்து களஆய்வு நடத்தியுள்ளோம். ஆனாலும், சாதியக் கொலைகளை தடுக்க யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது வேதனை.

சமூக செயற்பாட்டாளர், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பி.எஸ்.அஜிதா: சமூகத்தில் சாதியக் கொலைகள், அத்துமீறல்களை சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பும், கடமையும் அனைவருக்கும் உள்ளது. அதற்கு சமூக உணர்வுடன் பணியாற்றும் வழக்கறிஞர்களின் பங்களிப்பு அளப்பரியது.

அந்த வகையில், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து பலரை சட்டம் படிக்க வைத்து, வழக்கறிஞர்களாக உருவாக்கும் முயற்சியில் பிவிபி அறக்கட்டளை தனது முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் பேசினர். பிவிபி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் பி.வி.வெங்கட்ராமன் உள்ளிட்டோரும் பேசினர். முன்னதாக, ஜெயந்தி வரவேற்றார். பி.எஸ்.கீதா நன்றி கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *