அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்கும் வீடியோ: கோவை திமுக எம்.பி சரமாரி கேள்வி | Annapoorna Hotel Owner Apology Video: Coimbatore DMK MP Condemns

1310451.jpg
Spread the love

கோவை: “அன்னபூர்ணா விவகாரத்தில் சீனிவாசனுக்கு திமுக துணை நிற்கும். அன்னபூர்ணா சீனிவாசன் மிரட்டப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சீனிவாசன் பேசியதால் ஜிஎஸ்டி பிரச்சினைகள் எளிமையாக மக்களிடம் சென்றடைந்துவிட்டது” என்று கோவை திமுக எம்பி கணபதி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சருடன், கோவையைச் சேர்ந்த தொழில் துறையினர் கலந்துரையாடும் நிகழ்ச்சி கோவையில் நேற்று முன்தினம் (செப்.11) நடந்தது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் கவுரவத் தலைவரும், கோவை ஓட்டல் உரிமையாளருமான சீனிவாசன் ஜிஎஸ்டி வரிவிதிப்பு தொடர்பாக பேசினார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மறுநாள் கோவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அவர் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, அவரை வற்புறுத்தி மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டதாக தகவல்கள் பரவின. இது தொடர்பாக பாஜகவுக்கு எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இவ்விவகாரம் தொடர்பாக கோவை திமுக மக்களவை உறுப்பினர் கணபதி ப.ராஜ்குமார் கோவையில் இன்று (செப்.13) மாலை செய்தியாளர்களிடம் கூறியது: “அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் கொங்கு தமிழில் ஜிஎஸ்டியில் இருக்கும் பிரச்சினைகளை அழகாக விளக்கினார். அனைத்து ஹோட்டல்களின் சார்பாக அவர் பேசினார். குறைதீர்க்கும் கூட்டம் என நடத்தி விட்டு, குறைகளை கேட்டால் மிரட்டப்படுகின்றார். கொங்கு மண்டலத்துக்கு அதிக பாதிப்பு ஜிஎஸ்டியால் ஏற்பட்டுள்ளது. பாஜகவில் தர்பார் ஆட்சிதான் நடக்கிறது. சாப்பிடும் பிஸ்கட்டுக்கு 18 சதவீதம் வரி, தங்க பிஸ்கட்டுக்கு 3 சதவீதம் வரி விதிக்கப்படுகின்றது. அன்னபூர்ணா சீனிவாசன் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியாகி இருக்கின்றது.

சீனிவாசன் மன்னிப்பு கேட்கும் வீடியோ , அவரது அனுமதியுடன்தான் எடுக்கப்பட்டதா? மத்திய அமைச்சர் அவரை சந்திக்காமல் இருந்திருக்கலாம், ஆனால் கூட்டமாக நின்று இச்சம்பவத்தை வீடியோ எடுத்து இருக்கின்றனர். அவரை அழைத்து வந்து எதற்காக மன்னிப்பை ஏற்க வேண்டும்? இது கோவை மக்களை அவமானப்படுத்துவதை போன்றது. இவ்விவகாரத்தை பார்த்த பின்னர், இனி தொழில் துறையினர் எதுவும் பேசவே மாட்டார்கள். கோவையில் நடந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி கவுன்சில்தான் எல்லா முடிவும் என சொல்வது தொழில் முனைவோரை ஏமாற்றுவதற்குதான்.

அன்னபூர்ணா விவகாரத்தில் சீனிவாசனுக்கு திமுக துணை நிற்கும். அன்னபூர்ணா சீனிவாசன் மிரட்டப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சீனிவாசன் பேசியதால் ஜிஎஸ்டி பிரச்சினைகள் எளிமையாக மக்களிடம் சென்றடைந்து விட்டது. வீடியோ வெளியிட்டது தவறு என்றுதான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சொல்லி இருக்கிறார். மற்றதை பற்றி பேசவில்லை,” என்று அவர் கூறினார்.

அன்னபூர்ணா சீனிவாசன் பேசியது என்ன? – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தொழில்துறையினர் கலந்துரையாடும் நிகழ்ச்சி, கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் கவுரவ தலைவரும், கோவை ஓட்டல் உரிமையாளருமான சீனிவாசன் கூறியதாவது, “ஸ்வீட்டுக்கு 5 சதவீதம், உணவுக்கு 5 சதவீதம், காரத்துக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கிறீர்கள். பேக்கரி பொருட்களில் பிரட் மற்றும் பன்னுக்கு மட்டும் வரி இல்லை. மற்ற அனைத்து பொருட்களுக்கும் 18 சதவீத வரி விதிக்கப்படுகிறது.

ஒரே பில்லில் குடும்பத்துக்கு பலவித வரி விதிக்கப்படுவதால் கம்ப்யூட்டரே திணறுகிறது. பன்னுக்கு வரி இல்லை. ஆனால் உள்ளே கிரீம் வைத்தால் 18 சதவீத வரி. எனவே, வாடிக்கையாளர்கள் அவதிப்படுகின்றனர். கடை நடத்த முடியவில்லை. இந்தியா முழுவதும் சேர்த்து அதிகரித்தாலும் சரி, குறைத்தாலும் சரி, சீரான வரியை விதிக்க வேண்டும். முன்பெல்லாம் கடனுதவி பெற பல மாதங்கள் வங்கிகளுக்கு தொழில்முனைவோர் சென்ற காலம் மாறிவிட்டது.

மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் இன்று வங்கிகள் கடன் வழங்க துரத்துகின்றன. எனவே, நிதியுதவி பெறுவதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஓட்டல்களில் ஒரு நாள் வாடகை ரூ.7,500 பில் போட்டால் உடனடியாக ஐந்தில் இருந்து 18 சதவீத வரி விதிப்புக்கு மாறிவிடுகிறது. ஓட்டல்களில் ஸ்டார் பிரிவுகள் உள்ளன. எனவே, அதன் அடிப்படையில் வரி விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

அவர் பேசும்போது, அரங்கில் கூடியிருந்த தொழில்முனைவோர் அனைவரும் பலத்த கரகோஷம் எழுப்பினர். எளிமையான உதாரணத்துடன் பேசிய அவரது பேச்சு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கோவையை சேர்ந்த பல்வேறு தொழில்துறையினர் அவருக்கு நேரிலும் போனிலும் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இது குறித்து தொழில்துறையினர் கூறும்போது, “ஜிஎஸ்டி சட்டம் அமல்படுத்தப்பட்டது முதல் மாறுபட்ட வரி விதிப்பு, சில துறைகளுக்கு அதிக வரி விதிப்பு, செலுத்திய வரியை இன்புட் கிரெடிட் எடுப்பது என பல்வேறு சிரமங்கள் உள்ளன. இதுகுறித்து பல்வேறு தொழில் அமைப்புகள் சார்பில், மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், தொழில் துறையினர் எதிர்கொண்டுள்ள ஜிஎஸ்டி பிரச்சினைகள் குறித்து மத்திய நிதியமைச்சருக்கு எடுத்துக்கூறிய தொழிலதிபர் சீனிவாசனின் நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *