திருச்சி மாவட்டம், மேலப்புதூரில் உள்ள கான்வென்ட் ரோடு. பள்ளிக் குழந்தைளை ஏற்றிச் செல்லும் வாகனங்களால் பரபரப்பாக இருந்தது அந்தச் சாலை. காலை ஒன்பது மணிக்கு, தன் வண்டியில் வந்து இறங்கினார் அந்த ஆண். கால்கள் இரண்டும் போலியோவால் பாதிக்கப்பட்டு இருந்தது. வண்டியில் இருந்து ஊர்ந்து சென்று கடைக்குள் சென்றவர் டூவீலர் சீட்டிற்கான துணிகளை மரக்குச்சியால் தூக்கி ஆணியில் மாட்டினார்.

தவழ்ந்து சென்று, தையல் மெஷினுக்கு நேராக இருந்த சிமென்ட் திண்டில் ஏறி அமர்ந்து சீட் கவர்களை வெட்டுவது, தைப்பது என பரபரப்பாகினார். தன் உடல் குறை சார்ந்த எந்த எண்ணமும் அவரிடம் இல்லை. கால்களில் பலம் இல்லாத போதும் அவரின் கால் கட்டை விரல் மெஷினுக்கு அழுத்தம் கொடுத்தது ஆச்சரியமாக இருந்தது. வாடிக்கையாளர்களிடம் பேசுவது, சின்னச் சின்ன விஷயங்களையும் நேர்த்தியாக செய்வது என நம்மை வியப்பில ஆழ்த்தியவரிடம் பேச்சுக் கொடுத்தோம்.
“என் பேரு ராஜா. ‘பிளாட்டினம் சீட் கவர்’ங்கிறது என் கடை பேரு. இந்த ஏரியால 14 வருஷமா கடை வெச்சிருக்கேன். டூ விலர்களுக்கு வாடிக்கையாளர்கள் என்ன டிசைன்ல சீட், டேங்க கவர் கேட்டாலும் பண்ணிக் கொடுத்திருவேன்.
என்னுடைய தொழில் நேர்த்தியை பார்த்துட்டு, வாய்வழி விளம்பரம் மூலமா வாடிக்கையாளர்கள் தினமும் அதிகரிச்சுட்டே இருக்காங்க. தொழில் நல்லபடியா போகுதும்மா” என தன் தொழிலை அறிமுகப்படுத்தியவர் சீட் கவர்களை ஊசி முனைக்குத் தள்ளிக்கொண்டே தொடர்ந்தார்.

“எனக்கு சொந்த ஊர் திருச்சி. அண்ணன், அக்கானு நாங்க அஞ்சு பேரு. அப்பா – அம்மா ரெண்டு பேரும் கூலி வேலை செஞ்சுட்டு இருந்தாங்க. எனக்கு ஒரு வயசுல போலியோ அட்டாக் ஆயிருச்சு. கால் ரெண்டும் நடக்கும் திறனை இழந்திருச்சு. விவரம் தெரியுறதுக்கு முன்னாடியே போலியோ பாதிப்பு வந்ததால, சின்ன வயசிலேயே எல்லா வேலைகளையும் ஊர்ந்து, தவழ்ந்து செய்யக் கத்துக்கிட்டேன். எனக்கு சின்ன வயசா இருக்கும் போதே அப்பா தவறிட்டாரு. எங்க அம்மா ஒரு ஆள் வேலைக்குப் போயி எங்க அஞ்சு பேரை பார்த்துக்குச்சு.
கூலி வேலைக்குப் போகும், சித்தாள் வேலை செய்யும், ஸ்கூல்ல கேண்டின்ல வேலை செய்யும். எங்க அஞ்சு பேரோட பசியை போக்க எங்க அம்மா படாத கஷ்டம் இல்ல. இப்போ 85 வயசு ஆச்சு. மூணு அக்காங்களுக்கும் ரொம்ப சிரமப்பட்டுதான் கல்யாணம் பண்ணி வெச்சுது. நான் எட்டாவது வரைக்கும் படிச்சேன். பள்ளிக்கூடத்துக்குப் போனா எல்லாரும் என் உடல் குறையை வெச்சு கிண்டல் பண்ற மாதிரி ஃபீல் ஆச்சு. எல்லாத்துக்கும் யாரோ ஒருத்தர் உதவிய எதிர்பார்த்துட்டே இருந்த மாதிரி இருந்துச்சு. அதனால படிப்பை பாதியிலேயே நிறுத்திட்டேன்.

நிறைய இடத்துல வேலை கேட்டேன். எல்லாரும் உடம்புல இருந்த குறையை பார்த்துட்டு வேலை தர யோசிச்சாங்க. தெரிஞ்ச ஒரு அண்ணன் சீட் கவர் தைக்கிற கடையில வேலைக்குச் சேர்த்து விட்டாரு. ஒரு நாளைக்கு 15 ரூபா சம்பளம். உண்மையைச் சொல்லணும்னா குறையெல்லாம் மறந்து திறமையை வளர்த்துக்கிட்டேன். சீட் கட் பண்றது, அளவு எடுக்குறது, பின் அடிக்கிறது இந்த வேலைகள் எல்லாம் அத்துப்படி.
மெஷின் சத்தம் என் மனசை என்னமோ பண்ணிட்டே இருந்துச்சு. ஏறி உட்கார்ந்து தைக்கணும்னு ஆசை. என்னால தனியா நிக்க முடியாது. நடக்க முடியாது. ஆனா, ஏதோ ஒரு தைரியத்துல மெஷின்ல ஏறி உட்கார்ந்தேன். நம்பிக்கை கால்களுக்கு பலம் கொடுத்துச்சு. விரலால பெடலை அழுத்தி நான் தைக்க ஆரம்பிச்சப்போ மெஷின்னோட அந்த சத்தத்தை கேட்கும் போது, அது தான் என் காலடி சத்தங்கிற அளவுக்கு சந்தோஷம் இருந்துச்சு.
அன்னைக்கு நான் நடந்த மாதிரி சந்தோஷப்பட்டேன்” என்றவரின் கண்கள் மகிழ்ச்சியில் குளம் ஆகியது. சிரித்துக் கொண்டே ‘ இந்த கேட்குது பாருங்க. என் காலடி சத்தம்’ என மீண்டும் மெஷின்களின் பெடல்களை அழுத்திக்காட்டினார்.

“பத்து வருசத்துல தொழிலை நல்லாக் கத்துக்கிட்டேன். இடைப்பட்ட காலத்துல ஒரு பொண்ணு என்னை காதலிக்கிறதா சொன்னாங்க. அவங்க காதலை சொல்லும் போது, எனக்கு பயமாதான் இருந்துச்சு. இது எப்படி சரியா வரும்னு யோசிச்சேன். ஆனா அவங்க, ‘கட்டுனா உன்னத்தான் கட்டிப்பேன்’னு சொல்லிட்டாங்க. கல்யாணத்துக்கு அவங்க வீட்ல சம்மதிக்கல. எதிர்ப்பை மீறி கல்யாணம் பண்ணிக்கிட்டோம். குழந்தை பிறக்குற வரைக்கும் ஒரு பயம் இருந்துட்டே இருந்துச்சு. குறை இல்லாம பொறக்கணும்னு வேண்டாத சாமி இல்ல. தேவதை மாதிரி ரெண்டு பொண்ணுங்க எங்களுக்கு. பெரிய பொண்ணு காலேஜ் படிக்கிறாங்க. சின்ன பொண்ணு பிளஸ் டூ படிக்கிறாங்க.
என் மனைவி வீட்ல இருந்தே டெய்லரிங் பண்ணி சம்பாதிக்கிறாங்க. குச்சிதான் துணையா இருக்கும்னு நினைச்ச எனக்கு கடவுள் அழகான குடும்பத்தைக் கொடுத்து அழகு பார்த்தாரு. கிடைக்காததுக்கு வருத்தப்படுறதைவிட, கிடைச்சதை கொண்டாடணும். நான் சொல்றது சரிதானம்மா” என்றவர் தன் குறைகளை மறந்து சிரித்த போது அவரின் தையல் மெஷின் இன்னும் வேகமெடுத்திருந்தது.
“தினமும் காலையில ஒன்பது மணிக்கு கடைக்கு வந்தா ராத்திரி எட்டு மணி வரை வேலை இருக்கும். என் கடையில ரெண்டு பேர் வேலையும் செய்றாங்க. ஒரு நாளைக்கு 1,500 ரூபா வரை சம்பாதிக்கிறேன். வாழ்க்கையில எந்தக் குறையும் இல்ல. கால் இல்லாதவன்’னு சொன்னவங்க முன்னாடி கெளரவமா வாழுற வாழ்க்கையை, உழைப்பு உருவாக்கி கொடுத்திருக்கு” தம்ஸ் அப் செய்து விடைபெறுகிறார் ராஜா அண்ணா.!