அன்புமணி நடத்தும் பொதுக்குழுவுக்கு தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில், பாமக பொதுக் குழு ஆக. 9 ஆம் தேதி (சனிக்கிழமை) அன்புமணி தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, பாமக நிறுவனா் ராமதாஸ் நியமித்துள்ள மாநில பொதுச் செயலாளா் முரளி சங்கா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இருவரும் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு வழக்குரைஞர்கள் இன்றி தன்னுடைய நீதிபதி அறைக்கு வருமாறு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அழைப்பு விடுத்திருந்தார்.
நேரில் ஆஜரான அன்புமணியிடம் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
காணொளி வாயிலாக ஆஜரான ராமதாஸ் தரப்பு விளக்கத்தையும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேட்டறிந்தார். பின்னர் அன்புமணி நீதிமன்றத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
இந்த நிலையில் அன்புமணி நடத்தும் பொதுக்குழுவுக்கு தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில் பொதுக்குழுவுக்கு தடை கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து நாளை திட்டமிட்டபடி மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராமதாஸ் தரப்பு திட்டமிட்டுள்ளது.