“அன்புமணியை சந்திக்க மறுத்து விட்டார் ராமதாஸ்” – அப்போலோ விவகாரத்தை அம்பலப்படுத்தும் எம்எல்ஏ அருள் நேர்காணல் | PMK MLA Arul Interview

1379483
Spread the love

“ராமர் இருக்கும் இடம் தான் அயோத்தி. அதுபோல மருத்துவர் ராமதாஸ் எங்கு இருக்கிறாரோ, அதுதான் பாமக… அதுதான் வன்னியர் சங்கம்” என பொட்டில் அறைந்தது போல் தொடர்ந்து பேசி வருபவர் பாமக இணைப் பொதுச் செயலாளரான எம்எல்ஏ அருள். பாமகவின் தலைமை செய்தித் தொடர்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ள அருள், ராமதாஸின் உடல்நிலை பாதிப்பு, அன்புமணியின் கோபம் இவற்றுடன், அப்போலோ மருத்துவமனையில் நடந்தது என்ன என்பது குறித்து ‘இந்து தமிழ் திசை’க்காக அளித்த சிறப்புப் பேட்டியிலிருந்து…

சென்னை அப்போலோ மருத்துவமனையில் மருத்துவர் ராமதாஸ் என்ன சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்?

மருத்துவர் ராமதாஸ் அய்யாவுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்டது. குறிப்பிட்ட ஆண்டுகள் கடந்த நிலையில், அவரது உடல்நிலையை பரிசோதிக்க, அவர் சுயமாக மருத்துவமனைக்குச் சென்றார். மருத்துவமனையில் அவருக்கு ‘ஆஞ்சியோகிராம்’ பரிசோதனை செய்யப்பட்டது. அவரது உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பரிசோதனை முடிந்து தைலாபுரத்திற்கு சென்று ஓய்வில் உள்ள அய்யாவை, ஒரு வாரத்திற்கு நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் சந்திக்க வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளோம். அதன்பின், மாவட்ட வாரியாக அவர் சுற்றுப்பயணம் செய்ய பயணத்திட்டம் தயாரிக்கப்பட உள்ளது.

முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ் உள்ளிட்டவர்கள் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்களே..?

ராமதாஸின் உடல்நிலை குறித்து விசாரிக்க, முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சித்தலைவர் இபிஎஸ், நாம் தமிழர் சீமான், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், இடதுசாரி இயக்க தலைவர்கள் உள்ளிட்டோர் நேரில் வந்திருந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினி, மநீம தலைவர் கமல் உள்ளிட்டவர்களும் பிரதமர் அலுவலகத்தில் இருந்தும் போன் மூலம் விசாரித்தனர். அனைவருக்கும் பாமக சார்பில் நன்றி.

மருத்துவமனைக்கு ராமதாஸை சந்திக்க அன்புமணி வந்தாரா… அவரைச் சந்தித்து உடல் நலம் விசாரித்தாரா?

அன்புமணி மருத்துவமனைக்கு வந்தார். ஆனால், மருத்துவர் ராமதாஸ் அய்யா அவரைப் பார்க்க மறுத்து விட்டார். அதனால், அவர் பார்க்கவில்லை.

ராமதாஸை பார்க்க மருத்துவமனைக்கு வர வேண்டும் என அரசியல் தலைவர்களுக்கு நீங்கள் அழைப்பு விடுத்ததாக அன்புமணி குற்றம் சாட்டுகிறாரே?

மருத்துவ பரிசோதனை செய்ய அய்யா சுயமாக வந்தார். இதுகுறித்து எங்களுக்கு அப்போது தெரியாது. ஆனால், “மருத்துவர் ராமதாஸ் ஐசியுவில் உள்ளார்” என்று அன்புமணிதான் முதலில் பேட்டி கொடுத்தார். இதனால், திடீரென அய்யாவுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது போன்ற பதற்றம் ஏற்பட்டது. இந்தத் தகவலுக்குப் பிறகுதான், நானே மருத்துவமனைக்குச் சென்றேன். அவர் மீது உள்ள மரியாதை காரணமாக அரசியல் தலைவர்களும் பார்க்க வந்தனர். நானும், ஜி.கே.மணியும், தலைவர்களை அழைத்தது போல் அன்புமணி குற்றம் சாட்டுகிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எங்கள் தலைவரைப் பாருங்கள் என்று யாராவது அழைப்பார்களா… எந்த முட்டாளாவது அப்படி பேசுவார்களா?

நாங்கள் இருக்கும்போது, மருத்துவமனையில் யாரையும் அவரைச் சந்திக்க விடமாட்டோம் என்று அன்புமணி சொல்லி இருக்கிறாரே..?

இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

ராமதாஸை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, அவரை காட்சிப்பொருள் போலக் காட்டுவதாக அன்புமணி குற்றஞ்சாட்டி உள்ளாரே?

அது அவரது ஆற்றாமை. அதனால் அப்படிச் சொல்கிறார்.

முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் ராமதாஸை சந்தித்தது தனது செல்வாக்கை குறைத்துவிடும் என அன்புமணி நினைக்கிறாரோ?

இருக்கலாம். ஏனென்றால், அன்புமணி பிறந்த நாளுக்கு, தலைவர்கள் யாரும் வாழ்த்துச் சொல்லவில்லை. ஆனால், அய்யாவின் உடல்நிலை பாதிப்பு என்றதும், அனைவரும் வந்து பார்க்கின்றனர் அந்த ஆற்றாமையில் தான் இப்படிப் பேசுகிறார்.

பாமக இரு பிரிவுகளாக இயங்குவது பலவீனம் இல்லையா?

பாமக மருத்துவர் ராமதாஸிடம் தான் உள்ளது.

தேர்தல் ஆணைய அங்கீகாரக் கடிதம் தங்களுக்குத்தான் வந்துள்ளது என்று அன்புமணி தரப்பு கூறுகிறதே?

அது சும்மா… ஹம்பக் பண்ணுகிறார்கள். தவறான தகவல்களைக் கொடுத்து, தேர்தல் ஆணையத்தில் கடிதம் பெற்றுள்ளனர். இது குறித்து நாங்கள் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளோம். மேலும், தேர்தல் ஆணையம் பாமக தலைவருக்குத்தான் கடிதம் கொடுத்துள்ளது. ராமதாஸ்தான் பாமக தலைவர். அவர்தான் கட்சி.

தேர்தல் நெருங்கும் நிலையில், பாமகவுடன் கூட்டணிக்கு விரும்பும் கட்சிகள் யாரை அணுக வேண்டும் என குழப்பம் ஏற்படுகிறதே?

இதில் என்ன சந்தேகம். பாமகவுடன் கூட்டணி வேண்டுவோர், ராமதாஸ் அய்யாவைத்தான் அணுக வேண்டும்.

உங்கள் மேல் அன்புமணிக்கு தனிப்பட்ட கோபம் உள்ளதா?

அய்யாவுக்கு நான் தளபதியாக இருக்கிறேன். அதனால், கோபம் இருக்கலாம்.

எனது உயிருக்கு ஆபத்து என்றெல்லாம், முன்பு ஒருமுறை சொல்லியிருந்தீர்களே..?

ஆமாம். உண்மைதான் சொல்லி இருந்தேன்.

பாமக ஒன்றிணைய முயற்சிகள் நடந்துகொண்டு தான் இருக்கிறதா..?

அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என நாங்கள் ஆசைப்படுகிறோம். ஆனால், அதை அன்புமணி விரும்பவில்லை. அதனால்தான், அவர் வேண்டுமானால் புதியதாக தனிக்கட்சி தொடங்கிக் கொள்ளலாம் என்று அய்யா சொல்லிவிட்டார்.

ராமதாஸுக்கு பிறகு, அன்புமணி தான் தலைவர் என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டீர்கள். அதற்குள் எதற்காக இப்படி ஒரு பிரிவினை ஏற்பட்டது?

இது எங்களுக்கும் புரியவில்லை. இந்த முரண்பாடுகளால், வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவு வருத்தத்தில் இருக்கிறோம்.

அன்புமணியின் செயல்பாடு குறித்து உங்களிடம் ராமதாஸ் ஏதாவது சொல்லி வருத்தப்பட்டாரா?

ரொம்பவும் வருத்தப்பட்டுப் பேசினார். ‘நான் பெத்த பையனே, இப்படி அசிங்கப்படுத்துகிறாரே’ என்று ரொம்பவே வருத்தப்பட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *