பாமகவில் தந்தை – மகன் இடையே பிரச்னை நடந்து வருவது அனைவரும் அறிந்தது தான்.
வரும் டிசம்பர் 29-ம் தேதி, சேலத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது.
இந்த நிலையில், ராமதாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
போர்…
அதில், “இப்போது பாமகவில் நடந்து வருவது குடும்ப பிரச்னையோ, ஈகோவோ, கோபமோ அல்ல… இது நான் பெற்றெடுத்த இயக்கத்தின் ஆன்மாவைக் காப்பதற்கான போர்.
எனக்கு வயதாகிவிட்டது, புத்தி பேதலித்துவிட்டது, சுயநினைவு இல்லாமல் பேசுகிறார் என்று கடந்த சில நாள்களாக அன்புமணி கும்பல் என்னைப் பற்றி என்னென்னவோ கூறி வருகின்றன… அசிங்கப்படுத்துகின்றன.

அன்புமணியை நம்பியது மிகப்பெரிய தவறு
ஆனால், இந்தக் கட்சியைக் காயப்படுத்தாதீர்கள். இந்தக் கட்சி எனக்கு வந்த சீதனமோ, பரம்பரை சொத்தோ கிடையாது. இது நானாக கட்டிய மக்கள் கோட்டை.
இப்போது இந்தக் கட்சி பலவீனமாக நிற்கும்போது பெற்ற வயிறு பற்றி எரிகிறது.
நான் என் மகன் அன்புமணியை நம்பியது மிகப்பெரிய தவறு.
தலைமைப் பண்பு தானாகவும், தியாகத்திலும் வரவேண்டும். அன்புமணிக்கு எம்.பி, மத்திய அமைச்சர் பதவி, ராஜ்யசபா பதவி என பதவிகள் வழங்கினோம். அவருக்கு பொறுப்புகள் தான் வந்தன… பொறுப்புணர்ச்சி அல்ல.