அன்புமணி கூட்டிய பொதுக்குழு சட்ட விரோதமானது: தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம் | General Body Meeting Convened by Anbumani is Illegal: Ramadoss’ Letter to Election Commission

1372846
Spread the love

விழுப்புரம்: செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அன்புமணி கூட்டிய பொதுக்குழுக் கூட்டம் சட்ட விரோதம் என தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஆக.12) கடிதம் அனுப்பியுள்ளார்.

பாமகவில் உட்கட்சி மோதல் அதிகரித்துள்ள நிலையில், சென்னையில் பொதுக்குழுக் கூட்டத்தை தலைவர் அன்புமணி ராமதாஸ் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி நடத்தி முடித்தார். இக்கூட்டத்தில், பாமக தலைவராக அவர் ஓராண்டுக்கு நீட்டிப்பார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு இன்று (ஆக.12) அனுப்பப்பட்டதாக கூறப்படும் கடிதத்தை, அவரது தனி செயலாளர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ளார்.

அதில், “பாமக நிறுவனர் ராமதாஸ், கடந்த மே 30-ம் தேதி முதல் தலைவராக உள்ளார். செயல் தலைவராக அன்புமணி நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், எந்தவித அங்கீகாரம் இல்லாமல் எம்எல்ஏ மற்றும் கட்சியின் முன்னணி தலைவர்களை பதவி மற்றும் கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்து வருகிறார். அன்புமணி மேற்கொண்டுள்ள 100 நாள் நடை பயணத்துக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கு கடிதம் வழங்கியதை தொடர்ந்து, அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அன்புமணிக்கு கொடுக்கப்பட்ட செயல் தலைவர் பதவியை ஏற்காமல், போட்டியாக செயல்படுகிறார். கட்சியின் விதிகளை மீறி செயல்படும் அவரை சஸ்பெண்ட் செய்வது அல்லது கட்சியில் இருந்து நீக்குவது குறித்து ஒழுங்கு நடவடிக்கை குழு மூலமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சுய லாபத்துக்காக செயல்படும் அன்புமணியின் நடவடிக்கைகளை கட்சி ஏற்கவில்லை.

செயல் தலைவராக உள்ள அன்புமணி கூட்டிய பொதுக்குழுக் கூட்டம் சட்ட விரோதமானது. நிறுவனரின் ஒப்புதல் பெறாமலும், அவருக்கு அழைப்பு விடுக்காமல், கட்சியின் விதிகளை மீறி பொதுக்குழுவை நடத்தி உள்ளார். பாமக தலைவர் பதவியில், மேலும் ஓராண்டுக்கு தொடர்வதாக, அவராகவே அறிவித்து கொண்டுள்ளார்.

பாமக நிறுவனர் மற்றும் தலைவரான ராமதாஸின் அனுமதி இல்லாமல் எந்தவொரு கூட்டத்தையும் கூட்டுவதற்கு அன்புமணிக்கு உரிமை மற்றும் அதிகாரம் இல்லை. அவர், சாதாரண செயல் தலைவர் தான் என்பதை தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்து கொள்கிறோம்” என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *