அன்புமணி கேட்ட கேள்வி.. லிஸ்ட் போட்டு கலாய்த்த துரைமுருகன்! – Kumudam

Spread the love

அன்புமணி தற்போது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், பாலாற்றில் ஒரு தடுப்பணையாவது கட்டியதுண்டா? என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை நோக்கி கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தனது அமைச்சரவை காலத்தில் கட்டப்பட்ட தடுப்பணைகளின் பட்டியலை வெளியிட்டு அன்புமணியினை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுத்தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு-

”பாட்டாளி மக்கள் கட்சியை சார்ந்த அன்புமணி தன்னுடைய தந்தையான டாக்டர் அய்யா அவர்களை எதிர்த்து ரத கஜ துரக பதாதிகளுடன் தமிழகத்தில் திக் விஜயம் செய்ய புறப்பட்டிருக்கிறார்.

இதுகுறித்து கருத்து சொல்ல நமக்கு உரிமையில்லை; நாம் சொல்லப் போவதுமில்லை. ஆனால், இந்த திக் விஜயத்தில் நேற்று வேலூருக்கு வந்து ஒரு பொதுக்கூட்டத்தில் போர் பிரகடனம் செய்திருக்கிறார்.

அவர் பேசுகிற போது, என்மீது ஒரு சிறிய பாசமழையை பொழிந்துவிட்டு, அதே வேகத்தில் நான் அமைச்சராக இருந்து ஆற்றிய பணிகளை குறித்து விவரம் தெரியாமல் என்னுடைய அமைச்சர் பணியை குறித்து கொச்சைப்படுத்தி ஒரு குற்றச்சாட்டை என்மீது சுமத்தியிருக்கிறார். அதாவது, “இந்த மாவட்டத்தில் ஒரு அமைச்சர் இருக்கிறார். அவ்ரை நான் கேட்கிறேன். பாலாற்றில் ஒரு தடுப்பணையாவது கட்டியதுண்டா?” என்று முழக்கமிட்டிருக்கிறார்.

அன்புமணி கொஞ்சம் விவரமானவர் என்று இதுநாள் வரை நினைத்திருந்தேன். ஆனால், வேலூரில் என் மீது அவர் சாட்டிய தவறான குற்றச்சாட்டிலிருந்து அவருக்கு கொஞ்ச நஞ்ச விவரம் கூட தெரியாது என்று நிரூபித்திருக்கிறார்.

தலைவர் கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போது தான் ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுகின்ற பணியை ஆரம்பித்தார். அதன் தொடர்ச்சியாக, நான் இந்த துறைக்கு அமைச்சராக, கலைஞர் முதல்வராக இருந்த காலகட்டத்திலும், தளபதி மு.க.ஸ்டாலின் முதல்வராக இருக்கிற இந்த காலத்திலும், கட்டிய தடுப்பணைகள் விவரம் பின்வருமாறு-

பாலாற்றில்:

–> இறையங்காடு, 
–> பொய்கை
–> சேண்பாக்கம்
–> அரும்பருத்தி
–> திருப்பாற்கடல்

கவுண்டன்யாநதியில்:

–>ஜங்காலப்பள்ளி
–> செதுக்கரை

பொன்னையாற்றில்:

–> பரமசாத்து பொன்னை
–> குகையநல்லூர்

பாம்பாற்றில்

–>மட்றப்பள்ளி
–>ஜோன்றாம்பள்ளி

கொசஸ்தலையாற்றில்

–>கரியகூடல்

அகரம் ஆற்றில்

–>கோவிந்தப்பாடி

மலட்டாற்றில்

–> நரியம்பட்டு

வெள்ளக்கல் கானாற்றில்

–>பெரியாங்குப்பம்

கன்னாற்றில்

–> சின்னவேப்பம்பட்டு

மேற்குறிப்பிட்ட இடங்களில் தடுப்பணைகள் கட்டியிருக்கிறேன். இந்த ஆண்டு அம்பலூர், பாப்பனபள்ளி-செங்குனிகுப்பம், அம்முண்டி, வெப்பாலை ஆகிய இடங்களில் தடுப்பணை பணிகள் நடைபெற்று வருகின்றன.

எனவே அன்புமணி அவர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள். இனிமேலாவது பேசுவதற்கு முன், யாராவது விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டு சரியான புள்ளிவிவரத்துடன் பேசுவது நல்லது” என வெளியிடப்பட்டுள்ள பதிலறிக்கையில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *