சொந்தக் கட்சியிலேயே தனக்கு ஓர் இடமில்லாமல் வன்மத்தை வைத்துக் கொண்டு தந்தையுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் அன்புமணியின் அறிக்கை விரக்தியின் உச்சம் என்றும் அன்புமணி நாடாளுமன்றத்திற்குப் போய் என்ன சாதித்தார்?, தருமபுரி மக்களுக்காக என்ன பெற்றுத் தந்தார்? என தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தருமபுரியில் மொத்தமுள்ள 5 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வீழ்த்தப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையில்தான் தருமபுரி மாவட்டத்தை முதல்வர் புறக்கணித்து வருகிறார் என அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் அன்புமணிக்கு பதிலளிக்கும் வகையில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சில விளக்கங்களை அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
சோற்றுக்குள் முட்டையை மறைக்கலாம்; அன்புமணி பூசணிக்காயையே மறைத்திருக்கிறார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நூற்றுக்கு நூறு வெற்றியை திமுக கூட்டணிக்கு மக்கள் தந்தது எப்படி? அன்புமணி சொல்வது போலத் தருமபுரியைப் புறக்கணித்திருந்தால், இந்த வெற்றி சாத்தியம் ஆகியிருக்குமா? இந்தக் கணக்குகூட தெரியாமல் அன்புமணி, வாய் புளித்ததோ மாங்காய் புளித்தோ என அவதூறுகளை அள்ளி தெளித்திருக்கிறார்.
தந்தையுடன் மல்லுக்கட்டும் அன்புமணி
தருமபுரி மாவட்டம் மீதான வன்மத்தைக் கைவிடுங்கள்: காவிரி உபரிநீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்துங்கள் எனச் சொல்லியிருக்கிறார். சொந்தக் கட்சியிலேயே தனக்கு ஓர் இடமில்லாமல் வன்மத்தை வைத்துக் கொண்டு தந்தையுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் அன்புமணியின் அறிக்கை விரக்தியின் உச்சம். தன் இயலாமையை மறைக்க இருப்பை தக்க வைத்துக் கொள்ள, தருமபுரியைப் பகடைக்காயாய் பயன்படுத்துகிறார். எந்தப் பாகுபாடும் காட்டாமல் தருமபுரியைச் சமதருமபுரியாகத்தான் திராவிட மாடல் அரசு நடத்துகிறது. அதனை வரும் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு காட்டும்.
தருமபுரி – மொரப்பூர் ரயில் பாதை திட்டத்திற்காக ஒரு கைப்பிடி மண் கூட கையகப்படுத்தப்படவில்லை” என்று சொல்லியிருக்கிறார் அன்புமணி. மொரப்பூர் – தருமபுரி புதிய அகல ரயில் பாதை திட்டத்திற்கான நிர்வாக அனுமதி 17.4.2023 அன்று வழங்கப்பட்டு, கடந்த ஆண்டு மட்டும் 78.54 ஹெக்டேரில் 54.14. ஹெக்டேர் நில எடுப்புக்காக அறிவிக்கை செய்யப்பட்டது. 60 விழுக்காடு நில எடுப்பு பணிகள் முடிவடைந்துள்ளன. புறம்போக்கு நிலங்கள் 13.72.0 ஹெக்டேர் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதில், 2000 பட்டாதாரர்களுக்கு இதுவரை ரூ.29 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 24.40.02 ஹெக்டர், ரயில் நிலையம் மூக்கனூரில் அமைவது குறித்துத் திருத்திய நில அட்டவணை தயாரிக்கும் பணியில் உள்ளது. நில எடுப்புப் பணிகள் விரைவில் முடிக்கப்படும்.