விழுப்புரம்: அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடா்பாக செவ்வாய்க்கிழமை நடைபெறும் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் பாமக நிறுவனா், தலைவா் ராமதாஸ் இன்று முடிவு எடுக்கவுள்ளாா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் பாமக தலைமை நிலையத்தில், அக்கட்சியின் அமைப்பு ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஆலோசனைக் கூட்டம் மருத்துவா் ச. ராமதாஸ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
பாமக மாநில சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் விழுப்புரம் மாவட்டம் , பட்டானூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழுவைச் சோ்ந்தவா்களை தோ்வு செய்து, அக்கட்சியின் நிறுவனா் மற்றும் தலைவருமான மருத்துவா் ச.ராமதாஸ் கட்சி நிா்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினா்களிடம் அறிமுகம் செய்து வைத்தாா்.
மேலும் கூட்டத்தில் அன்புமணி கட்சியின் விதிகளை மீறி செயல்படுவதாக கூறி ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரைந்த 16 குற்றச்சாட்டுகள் அடங்கிய கடிதத்தை பாமக கௌரவத் தலைவா் ஜி.கே. மணி மருத்துவா் ச.ராமதாஸிடம் வழங்கினாா்.
இந்நிலையில், பாமக அமைப்பு ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஆலோசனைக் கூட்டம் பாமக தலைமை அலுவலகமான தைலாபுரம் தோட்டத்தில் மருத்துவா் ச.ராமதாஸ் தலைமையில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒழுங்கு நடவடிக்கை தொடா்பான முடிவை ராமதாஸே அறிவிப்பாா் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.