சென்னை: “இன்றைய உலகுக்கு தேவை பொருளாதார வலிமையோ, படைபலமோ அல்ல. மாறாக அவற்றை விட மிகவும் சக்திவாய்ந்த அன்பு, கருணை, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை ஆகியவை தான். இயேசுவின் கொள்கைகளும், போதனைகளும் தான் உலகம் இன்று கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஆகும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைவரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும் என்பதை போதித்த இயேசு கிறித்துவின் பிறந்தநாளை கிறித்துமஸ் திருநாளாக கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏழைகளிடத்திலும், பாவிகளிடத்திலும் இயேசுபிரான் அன்பு காட்டினார். உலகம் முழுவதும் அன்பு, கருணை, மகிழ்ச்சி ஆகியவை நிலவ வேண்டும் என்று விரும்பினார். மனிதர்களை மட்டுமின்றி, விலங்குகளையும் நேசித்தார். உன் மீது நீ அன்பு காட்டுவதைப் போல அடுத்தவர் மீதும் நீ அன்பு காட்டுவாயாக! என்று அன்பின் மகத்துவத்தை புரிய வைத்தவர். தமது வாழ்நாளின் கடைசி நொடி வரை அன்பையும், கருணையையும் காட்டியது மட்டுமின்றி, எதிரிகளுக்கு மன்னிப்பையும் வழங்கினார்.
இன்றைய உலகுக்கு தேவை பொருளாதார வலிமையோ, படைபலமோ அல்ல. மாறாக அவற்றை விட மிகவும் சக்தி வாய்ந்த அன்பு, கருணை, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை ஆகியவை தான். இயேசுவின் கொள்கைகளும், போதனைகளும் தான் உலகம் இன்று கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஆகும். இயேசுவின் கொள்கைகள் மட்டுமின்றி அவற்றை பின்பற்றுவோரும் வெற்றி பெறுவது உறுதி.
உலகில் அனைவரும், அனைவரிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும். பொருளாதாரத்திலும், கணிதத்திலும் பத்தும், பத்தும் நூறு என்றால், அன்பு செலுத்துவதில் பத்தும், பத்தும் பத்தாயிரம் ஆகும். எனவே, அனைவரும், அன்பு, உதவி, கருணை, சகோதரத்துவம், மகிழ்ச்சி, நல்லிணக்கம், கருணை ஆகியவற்றை அனைவருக்கும் வாரி வழங்குவோம். அவை பல்கிப் பெருகி இந்த உலமே அமைதி, கருணை, வளம், ஒற்றுமை, மகிழ்ச்சி, சகோதரத்துவம், நல்லிணக்கம் உள்ளிட்டவற்றால் நிறையட்டும் என்று கூறி அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை கிறித்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.