வாசகர்களின் வரவேற்புடன் சென்னை நந்தனத்தில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் 49ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில், பல்வேறு புதிய புத்தகங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
இன்று காலச்சுவடு பதிப்பக அரங்கில் பெண்ணியவாதியும் எழுத்தாளருமான ஷாலின் மரியா லாரன்ஸ் எழுதிய ‘பொம்பளைங்க பஞ்சாயத்து’ நூல் வெளியானது. இந்நூலை முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், எழுத்தாளருமான சிவகாமி வெளியிட்டார்.

தன்னுடைய புத்தகம் குறித்து எழுத்தாளர் ஷாலின் மரியா லாரன்ஸ் விகடனிடம் பேசுகையில்,
“இது எனது நான்காவது புத்தகம். இதில் இரண்டு புத்தகங்கள் தீவிர பெண்ணியத்தைப் பேசும் நூல்கள். இப்போது வெளியாகும் இந்தப் புத்தகம் கூடுதல் சிறப்பானது என்பதற்குக் காரணம், இதில் நான் அம்பேத்கரை முழுமையாக ஏற்றுக்கொண்டு அவரையும் சேர்த்து எழுதியிருக்கிறேன்.
இதுவரை என் புத்தகங்களில் அம்பேத்கரைச் சேர்க்காதது எனக்கே ஒரு அவமானமாகத் தோன்றுகிறது. ஆனால் எனக்கு இவ்வளவு நல்லது நடந்ததற்குக் காரணமே அம்பேத்கர்தான். அம்பேத்கர் அமைச்சராக இருந்து ராஜினாமா செய்ததும் பெண்களுக்காகத்தான்.
இந்தப் புத்தகம் பல விஷயங்களைப் பேசுகிறது. மோசமான திருமணங்களில் இருந்து, நச்சுத்தன்மை நிறைந்த காதல் உறவுகளில் இருந்து பெண்கள் எப்படி வெளியில் வர வேண்டும் என்பதையும் இதில் எழுதியிருக்கிறேன். காதல், காமம் என எல்லா உறவுகளிலும் சுயமரியாதை அவசியம். இந்திய அரசியலமைப்பு ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்கிறது.