“மரணத்துக்கு உடலைக் கொண்டு செல்லும் ஆற்றல் உண்டு. ஆனால், மனிதனைப் பற்றிய நினைவுகளைக் கொண்டு செல்லும் ஆற்றல் அந்த மரணத்துக்கு இல்லை. அதனால் தான் கலைஞரின் நினைவுகள் இன்றும் நம்மோடு இருக்கின்றன” என்று அழகாகப் பேச ஆரம்பிக்கிறார் திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் கம்பம் பெ.செல்வேந்திரன். அவரிடம் அந்தக் காலத்தில் அரசியல் கட்சிகளின் தேர்தல் நடைமுறைகள் எப்படி இருக்கும் என்று கேட்டு பேச்சுக் கொடுத்தோம். “அதை எல்லாம் இனிமேல் எதிர்பார்க்க முடியுமா தம்பி…?” என்றபடி டைம் மெஷினைத் தட்டிவிட்டார் செல்வேந்திரன்.
“1965-ல் நான் பள்ளியில் படித்த காலத்திலேயே கலைஞரை ஹீரோவாகப் பார்த்தவன். 1971-ல் நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது நேரடி அரசியலில் ஈடுபடத் தொடங்கினேன். அப்போது நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தேன். அப்போதெல்லாம் தேர்தல் வரைதான் கட்சிகளுக்குள் ஒருவருக்கு ஒருவர் போட்டி மனநிலை இருக்கும். அதன் பிறகு அனைத்தையும் மறந்து ஒன்றுக்குள் ஒன்றாகி விடுவோம். பிரச்சாரத்துக்குச் செல்லும் ஊர்களில் தங்கும் விடுதி வசதி எல்லாம் அப்போது குறைவு. பெரும்பாலும் கட்சிக்காரர்களின் வீடுகளில் தான் தங்கவேண்டும். பல நேரங்களில் அதுகூட கிடைக்காமல் வீட்டுத் திண்ணைகளில் தூங்கி எழுந்த அனுபவமும் நிறையவே இருக்கிறது.
பயணம் செய்யும் காரிலேயே தான் பகலில் சற்று கண்ணயர வேண்டும். ஆங்காங்கே வயல்வெளிகளில் இருக்கும் பம்ப்செட்களில் குளித்து உடைமாற்றிக் கொண்டு அடுத்த ஊர் பிரச்சாரத்துக்குப் புறப்படுவோம். இரவு 10 மணிக்குள் பிரச்சாரத்தை முடிக்க வேண்டும் என்ற ஆணையக் கட்டுப்பாடுகள் எல்லாம் அப்போது இல்லை என்பதால் நள்ளிரவைத் தாண்டியும் எங்களைப் போன்றவர்களின் பேச்சைக் கேட்க கூட்டம் காத்துக்கிடக்கும். நேரங்காலம் தப்பிவிடும் என்பதால் பல நேரங்களில் கட்டுச்சோறு கட்டிக் கொண்டு பிரச்சாரத்துக்குப் போன அனுபவங்களும் உண்டு.
இப்போதெல்லாம் கட்சிகள் பூத் கமிட்டி செலவுகளுக்காக தாராளமாய் பணம் கொடுக்கின்றன. ஆனால், அன்றைக்கு அப்படி எல்லாம் இல்லை. கைக்காசை செலவழிப்போம். கட்சியிலிருந்து 5 ரூபாய் கொடுப்பார்கள். கொள்கைப் பற்றில் ஊறித் திளைத்த கட்சிக்காரர்கள் பலர் அதைக்கூட கைநீட்டி வாங்க மாட்டார்கள். ‘காசு கொடுத்து எங்களை அவமானப்படுத்துகிறீர்களா?’ என்று சண்டை போடுவார்கள்.
அதேபோல் வேட்பாளர்கள் பிரச்சாரத்துக்குச் செல்லும் இடங்களில் தேர்தல் செலவுகளுக்காக மக்களே தங்களால் முடிந்ததை நன்கொடையாக கொடுத்த காலம் அது. இப்போது போல அப்போதெல்லாம் வேட்பாளர்களுக்கு பணம் பெரிதாக தேவையில்லாத நிலையும் இருந்தது. கட்சிக்காக எத்தனை ஆண்டுகள் உழைத்திருக்கிறான், கட்சி அறிவித்த போராட்டங்களில் கலந்து கொண்டு எத்தனை முறைஜெயிலுக்குப் போயிருக்கிறான் என்பதைத் தான் வேட்பாளர் தேர்வுக்கான பிரதானத் தகுதியாக எடுத்துக் கொண்டனகட்சிகளின் தலைமைகள்.
அதனால்தான் ஏழைகளும் அன்றைக்கு தேர்தலில்நிற்க முடிந்தது. ராமநாதபுரம் தொகுதியில், குதிரை வண்டி ஓட்டிய தங்கப்பன் என்பவரை நிறுத்தி எம்ஜிஆர் ஜெயிக்க வைத்த அதிசயமும் நடந்தது. 1977-ல் பெரியகுளம் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் ராமசாமி வெற்றி பெற்றுவிட்டார். ஆனால், பதவியேற்புக்காக டெல்லி செல்ல அவரிடம்கையில் பணம் இல்லை. எப்படிச் செல்வது என்று தெரியாமல் பரிதவித்துக் கொண்டு இருந்தார்.
அப்போது (அதிமுகவில் இருந்த) நான், தேர்தல் செலவு போக கையில் எஞ்சி இருந்த பணத்தில் அவரை சென்னைக்கு அழைத்துச் சென்றேன். நல்லவேளையாக, சென்னையிலிருந்து டெல்லி செல்ல எம்ஜிஆரே விமான டிக்கெட் எடுத்திருந்ததால் சிக்கலின்றி டெல்லி சென்று பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு திரும்பினார் ராமசாமி. இப்படி எல்லாம் இன்றைக்கு நடக்குமா என்று உங்களால் கற்பனையாவது பண்ணிப் பார்க்க முடிகிறதா?
அப்போதெல்லாம் மக்களும் ஓட்டுக்கு காசு வாங்கும் எண்ணமே இருந்ததில்லை. அதனால் வேட்பாளர்களின் தரம் பார்த்து வாக்களித்தார்கள். தொண்டர்களும் சிங்கிள் டீயை குடித்துக் கொண்டே அர்பணிப்புடன் கட்சிப் பணிகளில் தங்களைஈடுபடுத்திக் கொண்டார்கள்.அத்தகைய தொண்டனைப் பார்ப்பதே இன்றைக்கு அரிதிலும் அரிதாக இருக்கிறது.
முன்பெல்லாம் மக்களவைக்கும் சட்டப் பேரவைக்கும் ஒன்றாகத் தான் தேர்தல்கள் நடக்கும். 1984-ல் பெரியகுளம் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டேன். ஆண்டிபட்டி சட்டப்பேரவை தொகுதியில் எம்ஜிஆர் போட்டியிட்டார். மருத்துவச் சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருந்த அவர், தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு வராமலேயே வெற்றி பெற்றார். பெரியகுளம் எம்.பி-யாக நானும் வெற்றிபெற்றேன். ஆனால், எம்ஜிஆர் போட்டியிட்ட ஆண்டிபட்டிதொகுதியில் அவரை விட நான் 900 வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருந்தேன்.
இதை அன்றைய பத்திரிகைகள் எம்ஜிஆருடன் என்னை ஒப்பிட்டு விமர்சித்திருந்தன. எம்ஜிஆரோ, ‘என்னைப் போலவே என் தம்பி மீதும் நம்பிக்கை வைத்து அவருக்கு அதிகமான வாக்குகளைத் தந்திருக்கிறீர்கள்’ என்று பெருந்தன்மையுடன் பாராட்டினார். இதையெல்லாம் என்றைக்கும் என்னால் மறக்கமுடியாது. சேடபட்டியில் ஒருமுறை நான் பிரச்சாரம் செய்தபோது விவசாயி ஒருவர் தன்னுடைய அழுக்கு வேட்டியில் பத்திரமாக முடிந்து வைத்திருந்த 2 ரூபாயை எடுத்து எனக்கு நன்கொடையாகத் தந்ததும் இன்றைக்கும் என் நெஞ்சில் நிழலாடும் சம்பவம்.
அந்தக் காலத்தில் பிரச்சாரத்துக்கு வருபவர்களுக்கு சோடா, கலர், பிஸ்கெட் என மக்களே கொடுத்து உபசரிப்பார்கள். காருக்கு பெட்ரோல் போட மட்டும் காசு இருந்தால் போதும். தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்துவிடலாம் என்ற நிலை அப்போது இருந்தது. இதெல்லாம் இன்றைக்கு சாத்தியப்படுமா?” சிந்திக்க வைக்கும் கேள்வியோடு நிறுத்தினார் செல்வேந்திரன்.