அம்பானி இல்லத் திருமண நிகழ்வில் அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய் இருவரும் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1997-ல் இருவர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய். பின்னர் ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ராவணன், எந்திரன் படங்களில் நடித்துள்ளார். பின்னர் ஹிந்திப் படங்களில் மட்டும் நடிக்க ஆரம்பித்தார்.
2007-ல் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழில் பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலம் சினிமா ரசிகர்களிடையே பேசுபொருளானார். பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராயின் நடிப்பும் வெகுவாக பாராட்டப்பட்டது.
இதற்கிடையே, அபிஷேக் பச்சனும் ஐஸ்வர்யா ராயும் விவாகரத்து செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், இருவரும் இணைந்து சில நிகழ்ச்சிகளுக்குச் சென்று அத்தகவலைப் பொய்யாக்கினர்.
இந்த நிலையில், ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்காக அமிதாப் பச்சன் தன் குடும்பத்தினருடன் கலந்துகொண்டார். அப்போது, அவர்களுடன் அபிஷேக் பச்சன் மட்டும் இருந்தார். அதேநேரம், அந்த திருமண நிகழ்வுக்கு வந்த ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் அபிஷேக் பச்சன் இல்லாமல் புகைப்படத்திற்கு நின்றிருக்கிறார். இதனால், இவர்களின் விவாகரத்து சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது.
ஆனால், இன்னொரு விடியோவில் அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் இணைந்து அமர்ந்திருக்கின்றனர். இதனால், ஏன் இந்த வதந்திகளைக் கிளப்புகிறீர்கள் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.