`அப்செட் வைத்தி; இதை கொஞ்சமும் எதிர்பார்க்கல' – எடப்பாடியுடன் இணையும் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்

Spread the love

ஓ.பன்னீர்செல்வம் அணியான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழக்கத்தில் இருந்த வைத்திலிங்கம், நேற்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததுடன் நேராக அறிவாலயம் சென்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்து கொண்டார். பின்னர், `அண்ணா தொடங்கிய தாய் கழகத்தில் தன்னை இணைத்து கொண்டதாகவும்’ கூறினார். இதையடுத்து தஞ்சாவூரில் இணைப்பு விழா நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.

திமுகவில் இணைந்த வைத்திலிங்கம்

தஞ்சாவூர், செங்கிப்பட்டி பகுதியில் வரும் 26ம் தேதி திமுக மகளிர் அணி மாநாடு நடக்கிறது. இதன் ஒரு பகுதியில் மேடை அமைத்து தன் ஆதராவளர்கள் சுமார் ஆயிரம் பேரை ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைக்கிறார் வைத்திலிங்கம். இதற்காக ஆதரவாளர்களிடம் வைத்திலிங்கம், மகன்கள் பிரபு, சண்முகபிரபு, அவரது சம்பந்தி தவமணி ஆகியோர் அழைப்பு கொடுத்து வருகின்ரனர்.

வைத்தி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை!

வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் பலர் அவர் திமுகவில் இணைந்ததை விரும்பவில்லை. இதை விமர்சனம் செய்தும் வருகின்றனர். வைத்திலிங்கத்தின் தீவிர விசுவாசியான முன்னாள் எம்.எல்.ஏ குன்னம் ஆர்.டி.ராமச்சந்திரன் நேற்று இணைப்பு விழாவில் வைத்திலிங்கம் தலைமையில் தன்னை திமுகவில் இணைத்து கொள்வதாக கூறியிருந்தார். ஆனால் இன்று குடும்பத்தினர் கூறியதாலும், உடல் நிலையை கவனத்தில் கொண்டும் அரசியல் பொது வாழ்வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஆர்.டி.ராமச்சந்திரனின் இந்த முடிவை வைத்தி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள்.

அதிமுகவில் இணைய இருக்கும் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்

இந்நிலையில், தஞ்சாவூர் மாநகரத்தில் வைத்திலிங்கத்தின் தீவிர ஆதரவாளர்களாக வலம் வந்த முன்னாள் கவுன்சிலர்கள் சண்முகபிரபு, மேலவீதி சாமிநாதன், செல்லத்துரை, பில்லுக்காரத்தெரு ராஜா உள்ளிட்ட 30 பேர் வைத்தி திமுகவில் இணைந்ததை விரும்பவில்லை. இதையடுத்து மாநகரச் செயலாளர் சரவணன் தலைமையில் இன்று சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைத்து கொள்கின்றனர். இதற்காக இன்று காலையிலேயே சென்னை கிளம்பி விட்டனர்.

ஜெயலலிதா தான் எங்களுக்கு குலத்தெய்வம்

இதையறிந்த வைத்திலிங்கம் தரப்பு அப்செட் அடைந்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்து சாமிநாதனிடம் பேசினோம், “எங்களை பொறுத்தவரை மறைந்த ஜெயலலிதா தான் எங்களுக்கு குலத்தெய்வம். அவருடைய வாழ்நாள் எதிரி திமுக. ஜெயலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை செல்வதற்கும் காரணம் திமுக தான். அப்படிப்பட்ட திமுகவில் வைத்திலிங்கம் இணைந்தது எங்களுக்கு உடன்பாடில்லை. அதிகாரம் வரும் போகும். தன் சுய நலத்திற்காக, தன்னை காப்பாற்றி கொள்ள இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார் வைத்திலிங்கம்.

முன்னாள் கவுன்சிலர்
சாமிநாதன்

என்னை போன்றவர்களிடம் இணைப்பு விழாவில் திமுகவில் இணைவதற்காக அழைத்தார் நாங்கள் மறுத்து விட்டோம். ஒருங்கிணைப்பில் அதிமுகவில் இணைய வேண்டும் என்பதற்காகத்தான் அவருடன் இருந்தோம். அவர் இப்படி ஒரு முடிவை எடுப்பார் என நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை. எனவே தஞ்சாவூர் மாநகரச் செயலாளர் சரவணன் தலைமையில் எடப்பாடி முன்னிலையில் இன்று மாலை 6 மணியளவில் அதிமுகவில் இணைகிறோம்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *