Last Updated:
சட்டப்பேரவையில் 3 புதிய திட்டங்களை முதலமைச்சர் அறிவித்தார். அதன்படி, பெண்களுக்கு எதிரான பாலியல் குறித்த புகார்களை விசாரிக்க, 7 இடங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சட்டப்பேரவையில் இன்று பேசிய முதல்வர் ஸ்டாலின் திடீரென கண்கலங்கி நின்றார். அதன்பின் தொடர்ந்து பேசிய அவர் சட்டப்பேரவையில் பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்கலங்கியது ஏன் என்பது பற்றி பார்ப்போம்.
சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு, பதிலுரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பராசக்தி படத்தில் கருணாநிதி எழுதிய வசனத்தை போன்று, சட்டமன்றம் எத்தனையோ ஆளுநர்களை பார்த்துள்ளது, ஆனால், தற்போதைய ஆளுநர் வருகிறார், பேசாமலே போய் விடுகிறார் என்று விமர்சித்தார். அரசு தயாரிக்கும் உரையை அப்படியே ஆளுநர் வாசிப்பது தான் நடைமுறை என்று கூறிய முதலமைச்சர், அவர் திட்டமிட்டு விதிமீறிலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார்.
திமுக அரசு கொண்டு வந்த திட்டங்கள் மற்றும் அதனால் பயன் அடைந்தவர்கள் குறித்து பேசிய முதலமைச்சர், தமிழ்நாடு மாணவ மாணவிகள், அப்பா.. அப்பா என வாய் நிறைய அழைக்கும் போது மகிழ்ச்சி அடைவதாக கூறி, கண் கலங்கினார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல்துறை சுதந்திரமாக செயல்பட அனுமதி வழங்கி இருப்பதாக கூறினார். கடந்த 3 ஆண்டுகளில் ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக கூறிய முதலமைச்சர், எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி கூட்டணி கட்சிகளும் போராட்டம் நடத்தலாம் என்றார். அப்போது, அதிமுகவினர் சட்டப்பேரவைக்குள் கருப்பு சட்டை அணிந்து வந்ததை மு.க.ஸ்டாலின் விமர்சித்தார்.
மீண்டும் மீண்டும் டங்ஸ்ட்ன் விவகாரத்தை கிளப்பி, மதுரை மக்களை எதிர்க்கட்சியினர் குழப்புவதாக முதலமைச்சர் குற்றம்சாட்டினார். அப்போது, அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமளிக்கு இடையே பேசிய மு.க.ஸ்டாலின், தான் முதலமைச்சராக இருக்கும் வரை, டங்ஸ்ட்ன் சுரங்கம் அமையாது என்பதை மீண்டும் உறுதிப்படக் கூறுவதாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, 3 புதிய திட்டங்களை முதலமைச்சர் அறிவித்தார். அதன்படி, பெண்களுக்கு எதிரான பாலியல் குறித்த புகார்களை விசாரிக்க, 7 இடங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை, மதுரை கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளில் 3750 கோடியில் நகர்ப்புற சாலைகள் சீரமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். அதே போன்று, போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதற்காக வரும் ஆண்டில் 3000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
January 11, 2025 4:07 PM IST
