ஏவி.எம். சரவணன் குறித்தும் எம்.ஜி.ஆர் உடனான அவரின் நட்பு குறித்தும், ஏவி.எம்.நிறுவனத்தில் இணைந்து தொடர்ந்து அந்நிறுவனத்தில் பயணிக்கும் முக்கிய புள்ளி ஒருவரிடம் பேசினோம்.
“எம்.ஜி.ஆர் நடித்த அன்பே வா படத்துக்கு பூஜை போடப்பட்டது. அந்த சமயத்தில் ஆர்.எம். வீரப்பன் தயாரிப்பில் `நான் ஆணையிட்டால்’ என்கிற கருப்பு வெள்ளை படத்தில் பிசியாக நடித்துக் கொண்டு இருந்தார். பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என திட்டமிட்டு பரபரப்பாக படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது.

ஏவி.மெய்யப்ப செட்டியார் `அன்பே வா’ கலர் திரைப்படத்தை படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட ஆசைப்பட்டார். எம். ஜி.ஆர் என்ன நினைப்பாரோ, ஏதாவது மறுப்பு தெரிவிப்பாரோ என்கிற தயக்கம் இருந்தது.
அப்பாவின் சங்கடத்தை அருகில் இருந்து பார்த்த சரவணன் “அப்புச்சி நீங்க கவலைபடாதீங்க. நான் பார்த்துக்கிறேன். ” என்று சொல்லி விட்டு எம்.ஜி.ஆரை பார்க்கும் வேலையில் இறங்கினார். ராமாவரம் தோட்டத்துக்கு செய்தி செல்ல உடனே வரச் சொன்னார்கள். சரவணனை பார்த்தவுடன் “வாங்க முதலாளி” என்று வாஞ்சையுடன் வரவேற்றார், மக்கள் திலகம்.