அமரன் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு கமல் நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக நேற்று (அக். 31) திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ஆர்கேஎஃப்ஐ தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
அமரன் திரைப்படம் உலகளவில் முதல் நாளில் ரூ.42.3 கோடியை வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் கமல், “திரையிட்ட இடங்களில் எல்லாம் அமரன் படத்திற்கு மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது. அமரன் திரைப்படத்தை அறிவித்த போது “சில வேலைகள் சந்தோஷத்தைத் தரும்; சில வேலைகள் கெளரவத்தையும், பெருமையையும் தரும். அமரன் அனைவருக்குமே பெருமைத் தேடித் தரும்” என்று சொன்னேன். 1000 நாட்களுக்கும் மேலான உழைப்பிற்குப் பிறகு வெளியான அமரன் அடைந்திருக்கும் வெற்றி ‘மக்கள் நல்ல படத்தைக் கொண்டாடுவார்கள்’ எனும் எனது நம்பிக்கையை உறுதி செய்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “மேஜர் முகுந்த் வரதராஜன் இந்தத் தேசத்திற்காக எதிரிகளுடன் தீரத்துடன் போரிட்டு வீர மரணம் எய்தியவர். அன்புத் தந்தையை இழந்த மகள், அருமைக் கணவனை இழந்த மனைவி, ஆசை மகனைப் பறிகொடுத்த பெற்றோர். உயிர் நட்பைப் பறிகொடுத்த நண்பர்கள் சிந்திய கண்ணீர் அளவீடற்றவை.
மேஜர் முகுந்த் சிந்திய ரத்தத்திற்கும், அவரது அன்புக்குரியவர்கள் சிந்திய கண்ணீருக்குமான எங்களது எளிய காணிக்கைதான் அமரன். இது தனியொரு நபரின் சரிதை மட்டுமல்ல. இந்திய நிலப்பரப்பைக் காக்கும் ஒவ்வொரு வீரர் மற்றும் ஒவ்வொரு இந்தியக் குடும்பத்தின் கதையும்தான்.
இதையும் படிக்க | ஆச்சரியப்படுத்தும் அமரன் முதல் நாள் வசூல்!
தன்னைத் தந்து மண்ணைக் காத்த தமிழ் வீரனுக்கான சிறந்த சமர்ப்பணமாகவும், நாமறியாத ராணுவ வாழ்க்கையை, அவர்களின் குடும்பத்தார் செய்யும் தியாகங்களை மக்கள் அறிந்து கொள்ளக் கூடிய படமாகவும் அமரன் அமைந்ததில் நானும், எனது சகோதரர் ஆர்.மகேந்திரனும், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் பெருமை கொள்கிறோம். ரசிகர்களுக்கு என் நன்றி” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.