‘அமரன்’ பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து முன்னணியினர் கைது @ நெல்லை | petrol bomb incident: Hindu Munnani members arrested as a precautionary measure at Tirunelveli

1339904.jpg
Spread the love

திருநெல்வேலி: நெல்லை மேலப்பாளையத்தில் ‘அமரன்’ திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கு மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட வந்த இந்து முன்னணியின் மாநிலத் துணைத் தலைவரை போலீஸார் கைது செய்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் பிரதான சாலையில் உள்ள அலங்கார் திரையரங்கில் ‘அமரன்’ திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களுக்கு முன் எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலையில் திரையரங்க வளாகத்தில் அடையாளம் தெரியாத இருவர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவம் திருநெல்வேலியில் பரபரப்பு ஏற்படுத்தியிருந்தது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திரையரங்கில் போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து, சம்பவம் நிகழ்ந்த திரையரங்கில் இந்து முன்னணியின் மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் ஆய்வு செய்வதற்காக, தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்திருந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருநெல்வேலி மாநகர காவல்துறை துணை ஆணையர் விஜயகுமார் தலைமையிலான போலீஸார், சம்பவம் நிகழ்ந்துள்ள இடம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருப்பதாகவும், வெளிநபர்கள் உள்ளே சென்றால் தடயங்கள் பாதிக்கப்படும் என்று கூறி இந்து முன்னணி அமைப்பினரை திரையரங்கினுள் செல்ல அனுமதிக்கவில்லை.

இதனால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்து முன்னணி அமைப்பின் மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் மற்றும் அவருடைய ஆதரவாளர்களை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவத்தின் காரணமாக அந்த திரையரங்கில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அங்கு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *