அமர்க்களம்: `அஜித் – ஷாலினியின் ஆழமான காதலுக்கு நான் சாட்சி' – Exclusive BTS பகிரும் இயக்குநர் சரண்

Spread the love

அஜித்தின் 25வது படமான ‘அமர்க்களம்’ இம்மாதம் 24ம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது. சரண் இயக்கத்தில் அஜித், ஷாலினி நடித்திருக்கும் இப்படத்தில்தான் அவர்களின் காதல் மலர்ந்தது. ‘சொந்த குரலில் பாட…’ என ஷாலினி சொந்த குரலில் பாடிய பாட்டும், ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ பாடலும் இப்போதும் ஆல்டைம் ஹிட் வரிசையில் சேரும். இப்படம் குறித்து இயக்குநர் சரண், “ஒரு முரட்டுப்புயலை புரட்டிப் போட்ட தென்றல் ! படத்திலும் படப்பிடிப்பிலும் ஊடாடிய காதல் பட்டவர்த்தனமானதை பறைசாற்றும் விதமாக மீண்டும் உங்கள் ரசிப்பை மீட்ட வருகிறது இந்த ‘அமர்க்களம்’ ” எனத் தெரிவிருந்தார். அஜித் – ஷாலினி தம்பதியின் திருமணநாள் பரிசாக இப்படம் ரீரிலீஸ் ஆவதால், இயக்குநர் சரணிடம் பேசினோம். நெகிழ்ந்தும் மகிழ்ந்தும் சுவாரஸ்யங்களைப் பகிர்ந்தார்.

படப்பிடிப்பில் ஷாலினி, சரண்

“அஜித்தின் 25வது படம் என்பது எதேச்சையாகத் தெரிய வந்தது. திடீர்னு ஒருநாள் ‘சரண் ஜி, நான் கணக்குப் போட்டு பார்த்துட்டேன். இது என்னோட 25வது படம். அதனால நீங்க அதிகாரபூர்வமாகவே சொல்லிடலாம்’னு சொன்னார். அவரோட 25வது படம்னாதும் நான் ரொம்ப பிரெஷ்ஷராகிட்டேன். ஏன்னா, ஒரு நடிகருக்கு அவரோட 25வது படம்னா அது அவருக்கு வாழ்வா? சாவா? பிரச்னையைக் கொடுக்கும். அதனால கொஞ்ச ஜாக்கிரையா கொடுக்கணும், தவிர இதுல இருந்துதான் அவர் ஆக்ஷன் ஹீரோ அவதாரம் எடுக்கறார் என்றதும், இன்னும் கவனமா பண்ணனும்னு விரும்பினேன். இந்தப் படம் ஜெயிக்கணும் என்பதற்காக என்னால முடிஞ்ச அத்தனை விஷயங்களையும் கொண்டு வந்தேன். படத்தோட முதல் நாளிலேயே பெரிய வெற்றியாகும்னு கணிச்சிட்டேன். படத்துல ஒவ்வொரு சிட்சுவேஷனும், பாடலும், இசையை ஒண்ணோடு ஒண்ணு பின்னி பிணைஞ்சிருக்கும். ரீ ரிலீஸில் படம் முழுவதுமே அப்கிரேட் செய்திருக்கோம். ரீ மாஸ்டரிங் செய்திருப்பதால் படத்தை துள்ளியமாக பளீச்சென கொண்டு வந்திருக்கோம். இதற்கென 65 பேர் கொண்ட குழு இரவும், பகலுமாக வேலை செஞ்சிருக்காங்க.

அமர்க்களம்

ஒரு தியேட்டல நடக்கற கதை தான் ‘அமர்க்களம்’. அதனால படப்பிடிப்பை ஒரு தியேட்டர்ல தான் நடத்தினோம். மேற்கு மாம்பலத்துல உள்ள சீனிவாசா தியேட்டர்ல தான் மொத்த ஷூட்டிங்கும் நடந்தது. அதே தியேட்டர்ல படமும் வெளியாகி பெரிய ஹிட் அடிச்சது. இப்படி சம்பவங்கள் அரிதிலும் அரிதாகத்தான் நடக்கும். ஏன்னா, எந்த தியேட்டர்ல ஷூட்டிங் நடந்ததோ, அதே தியேட்டர்ல படம் வெளியாவது சாதனைதான். அஜித் சார், ஷாலு (ஷாலினி) ரெண்டு பேரின் முதள் காம்பினேஷன் காட்சியின் போது அவங்க படப்பெட்டியை கொடுக்க மாட்டேன்னு சொல்லுவாங்க. அஜித் சார் கத்தியை காட்டி மிரட்டி அந்த படப்பெட்டியை கேட்பார். அப்போ அஜித் சார் கையில் இருந்த கத்தியின் பட்டன் எதிர்பாராத விதமாக ஓப்பன் ஆகி ஷாலினியின் கையை கீறிடுச்சு. அஜித் சார் பதறினதோடு, ‘நம்மால தான் இப்படி ஆகிடுச்சு’னு குற்ற உணர்வும் ஆனார். அவர் காரில் இருந்த முதலுதவி பாக்ஸை உடனடியாக எடுத்துட்டு வந்துட்டார். ‘இப்ப உங்களுக்கு எப்படி இருக்குது’னு அன்னிக்கு முழுக்க நலம் விசாரிச்சுக்கிட்டே இருந்தார். அஜித் சார்கிட்ட இருந்த அந்த அக்கறை அவங்களை ரொம்பவே கவர்ந்திருக்கணும்னு நினைக்கறேன். ஆனா, அவங்க லவ் புரொபோஸ் செய்தது நான் இருக்கும் போதுதான்.

ஷாலினி, அஜித்

அதே தியேட்டர்ல சேர்ல நான் உட்கார்ந்து இருந்த போது என் வலது பக்கம் அஜித்தும், இடது பக்கம் ஷாலினியும் இருந்தாங்க. அந்த டைம்ல அஜித் ‘அமர்க்களம்’ படத்துக்கு மாசத்துல 10 நாள்கள் மட்டும் தேதிகள் ஒதுக்கி கொடுக்கறதா இருந்தது. அப்ப அஜித் என்கிட்ட, ‘சரண்ஜி உங்களுக்கு மாசத்துல பத்து பத்து நாள்களாக கால்ஷீட் கொடுக்காமல், மொத்தமாக கால்ஷீட் கொடுத்துடுறேன். ஷூட்டிங் ரொம்ப நாள் இழுத்துக்கிட்டே போனால், இந்த பொண்ணை நான் லவ் பண்ணிடுவேனோனு எனக்கு பயமா இருக்குது’னு சொன்னார். கிட்டத்தட்ட அவரது லவ் புரொபோசல் போல இருந்தது. இதைக் கேட்டதும் அவங்களுக்கு முகமெல்லாம் சிவந்திடுச்சு. but, it indicates. லவ் கெமிஸ்ட்ரி அவங்களுக்கும் வொர்க் ஆகிடுச்சு. ஆனாலும் இது எனக்கு தெரியும். ஆனா, படம் ஷூட்டிங் முடியுற வரை வெளியே தெரியாமல் பாத்துக்கணும்னு இருந்தோம்.

இன்னொரு சம்பவம். மூணாறுல ஷூட்டிங். கொச்சினில் இருந்து அஜித்தும் நானும் கார்ல போறோம். அந்த டைம்ல தான் மொபைல் போன் வந்த புதுசு. அதனால சிக்னல் ரொம்பவே அரிதாகத்தான் கிடைக்கும். சில மணி நேர பயணத்துக்கு பிறகு மூணாறு போய் சேர்ந்தோம். அங்கே ஷாலினி கடும் கோபத்துல நின்னுட்டு இருந்தாங்க. முகமெல்லாம் ஜிவுஜிவுன்னு கோபத்துல சிவந்திருக்க, ‘கொச்சியில் இருந்து இறங்கினதும் ஒரு போன் செய்திருக்க கூடாதா? நாங்க பாதுகாப்பாக வந்துட்டோம்’னு போன் பண்ணி சொல்லியிருக்கலாமே’னு கடும் கோபத்துல கேட்குறாங்க.. ஏன்னா, அஜித்கிட்ட இருந்து போன் எதுவும் வரலையே என்னாச்சோ..? ஏதாச்சோனு படபடப்பில் இருந்திருக்காங்கனு தெரிஞ்சது. ‘அவர் தான் போன் பண்ணல. நீங்களாவது வர்ற வழியில் எங்காவது போன் செய்து, வந்துட்டு இருக்கோம்னு சொல்லக் கூடாதானு என்னை பார்த்து கேட்டாங்க. அப்பத்தான் அவங்க ரெண்டு பேருக்குமிடையே இருந்த காதலின் ஆழத்தை உணர முடிஞ்சது.

சொந்தக்குரலில் பாட..

ஆனாலும் ஷூட்டிங்கில் அவரது கேரக்டர்ல ரொம்ப தெளிவா இருந்தார். அவரது காதலை எங்கேயுமே காண்பிச்சுக்கல. படம் ரிலீஸ் ஆனதும் அவரோட ரசிகர்கள் அத்தனை பேருக்குமே அவர் ஷாலு மேடத்தை லவ் பண்றார். கல்யாணம் செய்துக்க போறாங்கனு தெரிஞ்சிருந்தாங்க. ஆனாலும் படத்துல ஷாலு, இவரை திட்டி பேசும் காட்சிகள்ல ரசிகர்கள் கோபத்துல கொந்தளிச்சிட்டாங்க. ஏன்னா, கேரக்டர்கள்ல ரெண்டு பேருமே சின்ஸியர இருந்தாங்க.

சரண்

அதேபோல கிளைமாக்ஸ் காட்சியை எழுதுறதுக்காக ஊட்டி போக திட்டமிட்டேன். அஜித் கார்லேயே போலானும் என்னை அழைச்சிட்டு போனார். அப்ப ஆடியோ கேசட்ல ஏ சைடு, பி சைடுனு ரெண்டு பக்கமுமே படத்துல ஷாலினி பாடின பாடலைத்தான் பதிவு செய்து கொண்டு வந்திருந்தார். சென்னையில் இருந்து ஊட்டி போய் சேரும் வரை… திரும்பி வரும்வரை ‘சொந்தக்குரலில் பாட…’ பாட்டை நாங்க எத்தனை முறை கேட்டிருப்போம்னு கணக்கே கிடையாது. அவங்களோட ஆழமான காதலுக்கு நானும் ஒரு சாட்சி” என நெகிழ்கிறார் சரண்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *