அமர்நாத் பனிலிங்கத்தை 19 நாள்களில் 3.5 லட்சம் பக்தர்கள் இதுவரை தரிசனம் செய்துள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தாண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் 29-ம் தேதி தொடங்கியது. நாள்தோறும் குழுக்களாகப் பிரிந்து பக்தர்கள் குகைக் கோயிலுக்குச் சென்று வருகின்றனர்.
புதன்கிழமையன்று மட்டும் 13 ஆயிரம் பக்தர்கள் குகைக் கோயிலில் உள்ள பனி லிங்கத்தைத் தரிசனம் செய்ததாகவும், அமர்நாத் யாத்திரை தொடங்கியதிலிருந்து இதுவரை சுமார் 3.5 லட்சத்துக்கும் அதிகமானோர் தரிசனம் மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி ஜம்முவில் உள்ள பகவதி நகர் யாத்ரி நிவாஸில் இருந்து 4,383 பேர் அடங்கிய குழு ஒன்று இன்று காலை காஷ்மீருக்குப் புறப்பட்டுச் சென்றது. இவற்றில் 66 வாகனங்களில் 1,701 பக்தர்களை ஏற்றிச்சென்ற வாகனம் பால்டால் அடிப்படை முகாமிலிருந்து அதிகாலை 3.14 மணிக்குப் புறப்பட்டனர்.
மேலும், 2682 பக்தர்கள் 91 வாகனங்களில் அதிகாலை 4.00 மணிக்கு காஷ்மீரின் நுன்வான் அடிப்படை முகாமிலிருந்து புறப்பட்டதாகவும் ஸ்ரீ அமர்நாத்ஜி ஆலய வாரியத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு யாத்திரைக்கு 10 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாகவும், 52 நாள்கள் நடைபெறும் யாத்திரையானது ஆகஸ்ட் 29 அன்று ஷ்ரவண பூர்ணிமா மற்றும் ரக்ஷா பந்தன் பண்டிகைகளுடன் நிறைவடைகின்றது.