அமர்நாத் யாத்திரையில் இதுவரை 4.71 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் குகைக் கோயிலைத் தரிசனம் செய்து சாதனை படைத்துள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நிகழாண்டுக்கான அமர்நாத் யாத்திரை கடந்த ஜூன் 29ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்தாண்டு அமர்நாத் பனி லிங்கத்தை மொத்தம் 4.45 லட்சம் பேர் தரிசித்த நிலையில், இந்தாண்டு 32 நாள்களில் 4.71 லட்சம் பக்தர்கள் தரிசித்துள்ளனர்.
நேற்று ஒரேநாளில் 5 ஆயிரம் பக்தர்கள் குகைக் கோயிலைத் தரிசனம் செய்துள்ளனர். இந்த நிலையில் 1,645 பேர் கொண்ட புதிய குழு ஜம்முவில் உள்ள பகவதி நகர் யாத்திரி நிவாஸில் இருந்து புறப்பட்டது.
456 பக்தர்களுடன் 17 வாகனங்களில் வடக்கு காஷ்மீர் பால்டால் அடிப்படை முகாமிலிருந்தும், 1,198 பக்தர்களுடன் 34 வாகனங்களில் தெற்கு காஷ்மீர் நுன்வான்(பஹல்காம்) அடிப்படை முகாமிலிருந்தும் புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தாண்டு பக்தர்கள் செல்லும் வழிநெடுகிலும் பாதுகாப்புப் படை வீரர்கள், அடிப்படை முகாம்கள், சமூக சமையல் கூடங்கள் உள்ளிட்ட வசதிக்களுடன் இந்தாண்டு யாத்திரை இதுவரை அமைதியாகவும், சுமுகமாகவும் நடைபெற்று வருகின்றது.
காஷ்மீர் இமயமலையில் கடல் மட்டத்திலிருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள குகைக் கோயிலைத் தரிசிக்க 52 நாள்கள் நடைபெறும் யாத்திரையானது ஆகஸ்ட் 19ஆம் தேதி ஷ்ரவண பூர்ணிமா, ரக்ஷா பந்தன் பண்டிகைகளுடன் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.