அமலாக்கத்துறை என்ற பெயரை கேட்டாலே திமுகவில் யாருக்கும் தூக்கம் வருவதில்லை: நயினார் நாகேந்திரன் விமர்சனம் | Nainar Nagendran criticize dmk

1362464.jpg
Spread the love

சென்னை: அமலாக்கத் துறை என்ற வார்த்தையை கேட்டாலே திமுகவில் யாருக்கும் தூக்கம் வருவதில்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். தமிழக பாஜக ஊடகப்பிரிவு மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் வரிவிதிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கிராமபுறப் பகுதிகளில் போதைப் பொருள் விற்பனை அதிகரித்திருப்பதால் கிராமங்களுக்கிடையே மோதல்கள், மாணவர்களுக்கிடையே தகராறு சம்பவங்கள் அதிகம் நிகழ்கின்றன. இதை தமிழக அரசு தடுத்து நிறுத்தாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.

டாஸ்மாக் கடைகளை இரவு 10 மணிக்கு மேல் பூட்டிவிட்டு, அதன் பிறகு அதிக விலைக்கு சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்று வருகிறது. அமலாக்கத் துறை என்ற வார்த்தையை கேட்டாலே திமுகவில் யாருக்கும் தூக்கம் வருவதில்லை. அமலாக்கத் துறை என்பது தனி அமைப்பு. தேவையில்லாமல் யார் வீட்டிலும் சோதனை நடத்த முடியாது. எங்கு தவறு நடந்திருக்கிறதோ அங்கு தான் அவர்கள் சோதனை நடத்துவார்கள்.

கள்ளிலும் போதை இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும், அதை குடிப்பதால் உடலுக்குதான் நல்லது. மாநில அரசுக்கு கொடுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது. ஆனால், தமிழக அரசு எதிர்பார்த்து சில நிதிகளை கேட்கிறது. உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று ஏதோ ஒரு உத்தரவை பெற்று வந்ததால், தமிழக அரசு தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தையே நாடி வருகிறது. உச்ச நீதிமன்றம் என்ன சொல்கிறதோ சொல்லட்டும். ஆனால், மத்திய அரசு தானே நிதி கொடுக்க வேண்டும்.

மாநில அரசு மத்திய அரசுடன் சுமூகமான உறவு வைத்துக்கொண்டு, தேவையான நிதியை பெற்று மக்களுக்கு கொடுப்பதுதான் மக்களுக்கு செய்யக்கூடிய நல்ல காரியமாக இருக்கும். ஆனால், மாநில அரசு எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு காட்டுகிறார்கள். பிரதமர் வந்தாலும் அல்லது மத்திய அமைச்சர்கள் வந்தாலும் யாரும் வரவேற்க கூட செல்வதில்லை.

வரி பங்கீட்டில் தமிழகத்துக்கு ஒரு நீதி உத்தரபிரதேசத்துக்கு ஒரு நீதி என்பது இல்லை. மற்ற மாநிலங்களுக்கு எவ்வாறு நிதி பங்கீட்டு வழங்கப்படுகிறதோ அதுபோல தான் தமிழகத்துக்கும் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

‘மென்’ அமைப்பு தொடக்கம்: முன்னதாக சென்னை எழும்பூரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், துணை தலைவர் டால்பின் தர், அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், முன்னாள் மாநில தலைவர் தமிழிசை, மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் பங்கேற்றனர்.

அப்போது ஊடக விவாதங்களில் பங்குபெறுவோருக்கு பல்வேறு ஆலோசனைகளை நயினார் நாகேந்திரன் வழங்கினார். இந்த கூட்டத்தில் ஊடக விவதங்களுக்கும் பேரவை தேர்தலை எதிர்கொள்ளவும் உதவி புரிவதற்கு ‘மென்’ (மீடியா எம்பவர் நெட்வொர்க்) என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *