பரபரப்பு ஏற்படுத்திய இந்த மனு மீதான விசாரணையின்போது, “மனுதாரர் சரித்திரப் பதிவேடு குற்றவாளி. அவர்மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன’ என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் பரஞ்சோதி என்பவர், ‘அமலாக்கத்துறை, டிஜிபி-க்கு அனுப்பிய ரகசியக் கடிதம் சரித்திரப் பதிவேடு குற்றவாளிக்கு எப்படிக் கிடைத்தது? இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று மனு தக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கின் அடிப்படையில் ரகசியக் கடிதத்தை மனுதாரருக்கு வழங்கிய மத்திய அரசு அதிகாரிகள், அதற்கு உதவிய வழக்கறிஞர்கள் மீது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க டிஜிபி உத்தரவிட்ட நிலையில், தான் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆதி நாராயணன் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ். ஸ்ரீமதி முன்பாக விசாரணைக்கு வந்தபோது, ‘இந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை காவல்துறையினர் முதலில் வழக்கு பதிவு செய்தனர். தற்போது இந்த வழக்கு சென்னை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே மனுதாரருக்கு முன் ஜாமீன் வழஙகக் கூடாது’ என்று அரசுத் தரபில் கூறப்பட்டது. இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, ‘மனுதாரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்யலாம்’ என்றவர், முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.