சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் வளாகத்தில் அமலாக்கத் துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக முக்கிய நபர்கள், அரசியல் வாதிகள், தொழில் அதிபர்கள், சினிமா பிரபலங்கள் என பல தரப்பினர் விசாரணைக்காக அமலாக்கத் துறை அலுவலகத்தில் அவ்வப்போது நேரில் ஆஜராவார்கள். இதனால் இங்கு பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
மேலும் தொடர்ந்து இந்த அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்களும் வந்தன. இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு நேற்றுமுதல் (நவ.11) துணை ராணுவப் படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். இவர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.