ம.ஆ.பரணிதரன் |
| புது தில்லி: உத்தர பிரதேச காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) அல்லது காவல் படைத்தலைவரை (ஹெச்ஓபிஎஃப்) நியமிக்கும் விதிகளுக்கு அண்மையில் ஒப்புதல் வழங்கிய உத்தர பிரதேச அமைச்சரவை, அதில் மத்திய அரசு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், மத்திய உள்துறையின் முக்கியத்துவத்தை பலவீனப்படுத்தியிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இது நீறுபூத்த நெருப்பாக நீடித்துவரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடனான மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இணக்கமற்ற போக்கின் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது.
உத்தர பிரதேச அமைச்சரவை கடந்த நவம்பர் 4-ஆம் தேதி இரவு கூடி, டிஜிபி நியமன புதிய விதிகள் 2024}-க்கு ஒப்புதல் வழங்கியது. இதன்படி மாநில காவல்துறை தலைமை இயக்குநரை நியமிக்க யுபிஎஸ்சி-க்கு தகுதிவாய்ந்த அதிகாரிகளின் பட்டியலை அனுப்பி அது இறுதிப்படுத்திய 3 அதிகாரிகளில் ஒருவரை மாநில முதல்வர் தேர்வு செய்து நியமிக்கும் வழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகள்: உ.பி. புதிய நியமன விதிகளின்படி மாநில டிஜிபியை தேர்வு செய்யும் குழுவிற்கு மாநில உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைவராக இருப்பார். மாநில அரசின் தலைமைச் செயலர், யுபிஎஸ்சி தலைவர் அல்லது அவரால் முன்மொழியப்படும் ஒருவர், மாநில உள்துறையின் கூடுதல் தலைமைச் செயலர் அல்லது முதன்மைச் செயலர், ஓய்வு பெற்ற டிஜிபி உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருப்பர். அத்துடன் டிஜிபி ஆக நியமிக்கப்படுபவர் இரண்டு ஆண்டுகள் பதவிக்காலத்தை கொண்டிருப்பார். தேர்வு செய்யும் முன்பாக அவருக்கு குறைந்தது ஆறு மாதங்கள் பதவிக்காலம் இருக்க வேண்டும் என்கிறது புதிய விதிகள்.
2006-இல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் டிஜிபி நியமனத்தில் கட்சி, அரசியல், ஜாதி, மத பாகுபாடற்ற தேர்வு இருப்பதை உறுதிப்படுத்தும் நோக்குடனேயே வழிகாட்டு நெறிகளை வகுத்ததாக தெளிவுபடுத்தியது. தனிச்சட்டம் அல்லது அமலில் உள்ள காவல் சட்டத்தில் திருத்தங்களையோ விதிகளையோ மாநிலங்கள் அறிமுகப்படுத்தும்வரை தனது வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், தவறினால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்திருந்தது.
கீழ்ப்படியாத மாநிலங்கள்: ஆனால், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றாமலும் புதிய சட்டத்தையோ விதிகளையோ உருவாக்கிக் கொள்ளாமலோ உத்தரகண்ட், ஒடிஸா, மேற்கு வங்கம், ஜம்மு காஷ்மீர் போன்றவை தற்காலிக டிஜிபிக்களை நியமித்தன. ஆந்திர பிரதேசம், தெலங்கானா, உத்தர பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்கள் கிட்டத்தட்ட தற்காலிக டிஜிபிக்களை ஓராண்டாகக் கொண்டுள்ளன. 20 மாதங்களில் நான்கு தற்காலிக டிஜிபிக்களை உத்தர பிரதேசம் கண்டது.
உச்ச நீதிமன்றத்தின் அதிருப்தியைத் தவிர்க்க பஞ்சாப் அரசு கடந்த ஜூன் மாதம் அதன் காவல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தது. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் யுபிஎஸ்சி-க்கு ஐபிஎஸ் உயர் அதிகாரிகளின் பட்டியலை அனுப்பி அதில் இறுதி செய்யப்படும் 3 அதிகாரிகளில் ஒருவரை மாநில முதல்வர் தேர்வு செய்து நியமிக்கும் வழக்கத்தைத் தொடர்கின்றன. தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் இந்த நடைமுறைப்படியே காவல் துறைத் தலைவராக 2023, ஜூன் 29-ஆம் தேதி நியமிக்கப்பட்டு தனது இரண்டு ஆண்டுகள் பதவியை கடந்த ஆண்டு ஜூலை 1 முதல் வகித்து வருகிறார்.
அதிருப்தியில் உள்துறை: இந்தப்பின்னணியில் மத்திய உள்துறையோ மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ தலையிடுவதை கடந்த இரண்டு ஆண்டுகளாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் விரும்பாததன் வெளிப்பாடே டிஜிபி நியமன விதிகள் விவகாரத்தில் எதிரொலித்துள்ளது என்கிறது உ.பி. காவல் துறை வட்டாரம்.
உ.பி.யில் 2017, மார்ச் மாதம் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, 2022 ஜனவரி முதல் மத்திய உள்துறைக்கு டிஜிபி தேர்வுப் பட்டியலை அனுப்பாமல் 2024, ஜனவரி வரை தற்காலிக டிஜிபிக்களை மாநில அரசு நியமித்துள்ளது. எடுத்துக்காட்டாக, யுபிஎஸ்சி தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றிருந்த டிஜிபி முகுல் கோயல் 2022, மே 11ஆம் தேதி அப்பதவியில் இருந்து விலக்கப்பட்டு மாநில உளவுப்பிரிவு டிஜிபி டி.எஸ்.சௌஹான் சுமார் 10 மாதங்கள் மட்டுமே தற்காலிக டிஜிபியாக பணியாற்றினார். அவருக்குப் பிறகு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக இருந்த ஆர்.கே. விஸ்வகர்மா, சுமார் இரண்டே மாதங்களுக்கு தற்காலிக டிஜிபியாக இருந்தார்.
கடந்த ஆண்டு மே மாதம் விஜய்குமார் டிஜிபி ஆக்கப்பட்டு 2024, ஜனவரிவரை பதவியில் நீடித்து ஓய்வு பெற்றார். பின்பு நியமிக்கப்பட்ட 1990-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரி பிரசாந்த் குமார் தற்காலிக டிஜிபி அந்தஸ்துடன் பதவியில் தொடர்கிறார்.
இவர்களில் முகுல் கோயலுக்கு பிறகு தற்காலிக டிஜிபி ஆக நியமிக்கப்பட்ட நால்வரும் முதல்வர் யோகிக்கு விசுவாசமானவர்களாக அறியப்பட்டவர்கள் என்கிறது உ.பி. காவல் துறை வட்டாரம்.
ஏற்கெனவே உ.பி. அரசியல் விவகாரத்தில் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியாவுக்கும் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் இடையிலான இணக்கமற்ற போக்கு அதிகரித்து வருவதால் பல நேரங்களில் கேசவ் பிரசாத் மௌரியாவை பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சரும் தில்லிக்கு அழைத்து சமாதானம் கூறி அனுப்பி வைக்கும் நிகழ்வுகள் தில்லியில் அரங்கேறியுள்ளன.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சரின் கட்டுப்பாட்டில் உ.பி. காவல் துறை இருக்கக் கூடாது என்பதால் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை உ.பி. முதல்வர் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு சாதுர்யமாக காய்களை நகர்த்தியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
அத்துடன் உ.பி. வாரிய குழுக்கள் சிலவற்றில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பரிந்துரைத்தவர்களின் பெயர்கள் மீது முடிவெடுக்காமல் பல மாதங்களாக கோப்புகளை கிடப்பில் வைத்துள்ளார் முதல்வர் யோகி.