அமீபா, டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை: ஓபிஎஸ் | Precautionary measures needed to prevent amoeba, dengue fever: OPS emphasis

1276819.jpg
Spread the love

சென்னை: கேரளாவில் பரவிவரும் அமீபா தொற்றுநோய், கர்நாடகாவில் பரவிவரும் டெங்கு காய்ச்சல் போன்றவை தமிழகத்தில் பரவாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், “அரசியல்வாதிகள் படுகொலை, பாலியல் பலாத்காரம், கள்ளச்சாராய மரணங்கள், பட்டாசு ஆலையில் அடிக்கடி நிகழும் வெடி விபத்துகள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் என பல அச்சுறுத்தல்களுக்கு இடையே, கேரளாவில் அமீபா தொற்றுநோய் பரவி வருவதும், கர்நாடகாவில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.

அண்டை மாநிலமான கேரளாவில் மூளையை தின்னும் அமீபா என்னும் தொற்றுநோய் காரணமாக நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. மூளை திசுக்களை அழித்து மூளை வீக்கத்தை ஏற்படுத்தும் இந்த நோய் பாதிக்கப்பட்டால் 97 விழுக்காடு உயிரிழப்பு ஏற்படும் என்று அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

தலைவலி, காய்ச்சல், வாந்தி போன்றவை அமீபாவின் ஆரம்ப அறிகுறிகள் என்றும், பராமரிக்கப்படாத நீர்நிலைகள், ஏரி, ஆறு, நீச்சல் குளங்களில் உள்ள தண்ணீர் கோடைக் காலத்தில் நீண்ட நாட்கள் அதிக வெப்ப நிலையில் இருக்கும்போது, அதில் குளிப்பவர்களுக்கு அமீபா என்னும் உயிரி மூலம் தொற்று ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இந்தத் தொற்று நோய், சுகாதாரமற்ற நீர் நிலைகளில் குளிக்கும்போது மூக்கின் வழியாக உடலுக்குச் சென்று பாதிப்பினை ஏற்படுத்துவதால், தமிழகத்தில் உள்ள நீச்சல் குளங்களை சுத்தம் செய்யவும், நீர்நிலைகளில் குளிக்கச் செல்லும்போது மூக்கு கிளிப் அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தவும், கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தீவிரக் கண்காணிப்பினை மேற்கொள்ளவும், இதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இதேபோன்று, அண்டை மாநிலமான கர்நாடகாவில் டெங்கு காய்ச்சலால் 7,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை ஒட்டியுள்ள பெங்களூருவில் மட்டும் 2,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, டெங்குக் காய்ச்சல் தமிழகத்துக்குள் ஊடுருவாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொள்ள வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *