சென்னை: தமிழக பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத்தலைவர் பொன்னுசாமி சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
குஜராத் மாநிலத்தின் அமுல்நிறுவனம் தமிழகத்தில் ஆவினுக்கான கட்டமைப்பு போல கூட்டுறவு அமைப்பை உருவாக்கி பால் கொள்முதல் செய்ய வருவது ஆவினுக்கு ஆபத்தாக முடியும் என்பதால், அமுல் வருகையை தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று வலியுறுத்தி, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் எழுதினேன். இதைத் தொடர்ந்து, அமுல் வருகை தொடர்பாக மத்தியஉள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் உடனடியாககடிதம் எழுதிய நிலையிலும், நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி, தட்டக்கல், கூடுதிறைபட்டி, திருவண்ணாமலை மாவட்டம் படவேடு, கண்ணமங்கலம், வேலூர் மாவட்டம் அமிர்தி ஆகிய 6 இடங்களிலும் அமுல் நிறுவனம் கொள்முதல் நிலையங்கள் அமைத்து, சுற்றுவட்டார கிராமங்களில் பால் உற்பத்தி செய்யும் 6,000-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து தினசரி சுமார் 50,000 லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்கிறது. அங்கிருந்து ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பால் பண்ணைக்கு இந்த பால் கொண்டு செல்லப்படுவதாக வரும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.
எனவே, தமிழகத்தில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்ய தடை விதிப்பதற்கு, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.