திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் தீபநாயகர் கோயில் செப்புத் திருமேனி, அமெரிக்காவில் ரூ.2.34 கோடிக்கு விற்கப்பட்டதாகக் கூறி, பொன்.மாணிக்கவேல் குடவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐஜி-யான பொன்.மாணிக்கவேல் குடவாசல் காவல் நிலையத்தில் இன்று (அக்.18) புகார் அளித்தார். அந்த புகார் மனுவில், தீபங்குடியில் தீபநாயகர் என்ற சமணக் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இருந்த 76 செமீ உயரம் உள்ள தீபநாயகர் சுவாமியின் செப்பு திருமேனி கடந்த 20 வருடத்துக்கு முன்பு திருடப்பட்டு, கடத்தப்பட்டது. ஏற்கெனவே சிலை கடத்தல் வழக்கில் 10 வருடம் தண்டனை பெற்ற சஞ்சீவ் அசோகன் என்கிற நபர்தான் இந்த சிலையையும் அமெரிக்காவுக்கு கடத்தியுள்ளார். ஆனால், அவரை இன்னமும் கைது செய்யாமல் விட்டு வைத்துள்ளனர்.
2004-ம் வருடம் அமெரிக்காவுக்குக் கடத்தப்பட்ட இந்த சிலை, சுபாஷ் சந்திரகபூர் என்பவரால் ரூ. 2 கோடியே 34 லட்சத்துக்கு ராஜீவ் சவுத்ரியிடம் 2019-ம் ஆண்டில் விற்கப்பட்டுள்ளது. இத்திருட்டு தொடர்பாக குற்ற சாட்சியத்தை அழித்து உதவிய டாக்டர் ஜான் டுவிலியையும், ராஜீவ் சவுத்ரியையும் கைது செய்து இந்தியா கொண்டுவர வேண்டும். இதுகுறித்த அனைத்து தகவல்களும் கடந்தாண்டு காவல்துறை தலைவர், உள்துறை செயலர் ஆகியோரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நியூயார்க்கில் உள்ள தீபநாயகர் சிலை, ராஜீவ் சவுத்ரி என்கிற புரோக்கர் வாயிலாக ஏலம் விடப்பட உள்ளது. எனவே, இச்சிலையை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய, மாநில தொல்லியல் துறை, எம்பி, எம்எல்ஏ உள்ளடக்கிய சிறப்புக்குழு அமைத்து பிரதமரை நேரில் சந்தித்து ஏலத்தை தடுத்து நிறுத்த வேண்டும். வாஷிங்டனில் உள்ள வெளியுறவுத்துறை வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தி சமணர் கோயில் சிலையை தமிழகத்துக்கு மீட்டு கொண்டு வர வேண்டும், என்று அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.மாணிக்கவேல், “இந்த தீபநாதர் கோயில் சமணர் கோயில் என்பதால் அங்கு வேலை பார்ப்பவர்கள் இயல்பாகவே அச்ச உணர்வோடு உள்ளனர். மற்ற மதத்தினரைப் போல சண்டையிடுபவர்கள் அல்ல. மிகவும் சாதுக்கள் என்பதால், அவர்களுக்காக நாம் குரல் கொடுக்க வேண்டும். குறிப்பாக, இந்த சிலை என்பது நமது நாட்டின் கலாச்சார சின்னமாகும், அதனை மீட்க வேண்டும்.இந்தச் சிலை காணாமல் போனது பற்றி அரசுக்கு தகவல் தெரிவிக்காதது அறநிலையத்துறை அதிகாரிகளின் தவறு.
அவ்வாறு தெரியப்படுத்தாத அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு திருட்டு சம்பவத்துக்கு குறைந்தபட்சம் ஒரு எஃப்ஐஆர் பதிவு செய்வதற்கே ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியான நானே இவ்வளவு பாடுபட வேண்டி உள்ளது. சாதாரண மக்கள் எத்தகைய சிரமத்துக்கு உள்ளாவார்கள் என்பதை நினைக்கும்போது வேதனையாக உள்ளது.” என்று அவர் கூறினார்.