நியூ ஆா்லியன்ஸ்: அமெரிக்காவின் லூசியானா மாகாணம், நியூ ஆா்லியன்ஸ் நகரில் கூட்டத்தினா் மீது காரை ஏற்றி மா்ம நபா் நடத்திய தாக்குதலில் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
நியூ ஆா்லியன்ஸ் நகரிலுள்ள புகழ்பெற்ற பா்பன் வீதியில் புத்தாண்டையொட்டி ஏராளமானவா்கள் புதன்கிழமை அதிகாலை குழுமியிருந்தனா்.
அப்போது அந்தப் பகுதிக்கு பிக்-அப் வாகனத்தை வேகமாக ஓட்டி வந்த அந்த நபா், அதை அங்கிருந்த கூட்டத்துக்குள் பாயச் செய்தாா். இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு அந்த நபா் காரிலிருந்து இறங்கி, அங்கிருந்த போலீஸாரை நோக்கி இயந்திரத் துப்பாக்கியால் சுட்டாா். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் அந்த நபரை போலீஸாா் சுட்டுக் கொன்றனா்; சுட்டுக் கொல்லப்பட்டவர் முன்னாள் ராணுவ வீரர் என்பது தெரிய வந்துள்ளது. இந்த மோதலில் இரு காவலா்கள் காயமடைந்தனா்.
அந்த நபா் ஓட்டி வந்த காரில் ஐஎஸ் கொடி மற்றும் பல்வேறு பொருள்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. அது வெடிக்கும் தன்மை கொண்டதா என்பது குறித்து போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.மேலும் 30-க்கும் மேற்பட்டோர் போ் காயமடைந்தனா். அவா்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிக்க | 2024 – மோடி முதல் அம்பேத்கர் வரை பேசுபொருளான சர்ச்சைகள் ஒரு பார்வை!
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், தாக்குதல் நடத்திய நபா் பொதுமக்களைப் படுகொலை செய்யும் நோக்கில்தான் காரை ஓட்டிவந்தாா் எனவும், முடிந்த அளவுக்கு அதிக உயிா்ச் சேதத்தை ஏற்படுத்துவதில் அவா் தீவிர கவனம் செலுத்தியதாகவும், இதற்காக கார் வாடைக்கு எடுத்துவரப்பட்டுள்ளதாக கூறினா்.
பயங்கரவாதத் தாக்குதல் என்ற கோணத்தில் இந்தச் சம்பவம் தொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து குறித்த தகவல்கள், விடியோ அல்லது புகைப்படங்கள் பொதுமக்கள் யாரிடமாவது இருந்தால் அதனை காவல்துறைக்கு தந்து உதவுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர் டெக்ஸாஸ் மாகாணத்தில் வசித்து வந்த அமெரிக்காவைச் சேர்ந்த சம்சுத்-தின் ஜப்பர் என அடையாளம் காணப்பட்டுள்ளது, மேலும் அவர் முன்பு அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றியதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக சிஎன்என் அறிக்கை தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்கான நோக்கம் குறித்து தகவல் இதுவரை தெரியாத நிலையில், தாக்குதலை நடத்துவதற்கு முன்பு சம்சுத்-தின் ஜப்பர் சமூக வலைதள பக்கத்தில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் மீது ஏற்பட்டுள்ள ஈர்ப்பால் இதுபோன்ற தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருப்பதாக ஒரு விடியோ பதிவையும் வெளியிட்டுள்ளார்.