அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது நேற்று (ஜூலை 13) நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் அவர் காதில் குண்டு பட்டு காயமடைந்துள்ளார். துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படும் நபரை அமெரிக்க சிறப்புப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
நவம்பரில் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள டிரம்ப், பென்சில்வேனியாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் மர்ம நபர் ஒருவரால் இந்தத் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்கா ஒரு தேசமாக உருவானதிலிருந்து இதுவரை அமெரிக்க அதிபர்கள் மற்றும் அதிபர் வேட்பாளர்கள் மீது நிகழத்தப்பட்ட வன்முறை சம்பவங்கள் குறித்த ஒரு அலசல்:
படுகொலை செய்யப்பட்ட அதிபர்கள்:
ஆபிரகாம் லிங்கன் (16-வது அதிபர்)
ஆபிரகாம் லிங்கன், அமெரிக்க அதிபர்கள் வரலாற்றில் படுகொலை செய்யப்பட்ட முதல் அதிபராவார். ஏப்ரல் 14, 1865 அன்று லிங்கன் தனது மனைவி மேரி டோட் லிங்கனுடன் வாஷிங்டனிலுள்ள ஃபோர்ட் திரையரங்கில் சிறப்பு நகைச்சுவை நாடகம் ஒன்றினைக் காணச் சென்றபோது ஜான் வில்கிஸ் பூத் எனும் மேடை நாடக நடிகரால் தலையில் சுடப்பட்டு இறந்தார்.
சுடப்பட்டதும் அரங்கின் அருகேயுள்ள வீட்டில் மருத்துவ உதவிகளுக்காக அழைத்துச் செல்லப்பட்ட லிங்கன் மறுநாள் காலை உயிரிழந்தார்.
கொல்லப்படுவதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு அடிமைத்தனத்திற்கு எதிரான உள்நாட்டுப் போரில் அடிமைகளுக்கு சுதந்திரம் வழங்கி விடுதலைப் பிரகடனத்தை வெளியிட்டார் லிங்கன். அவர் கருப்பின மக்களின் உரிமைகளுக்கு ஆதாரவாக இருந்தது கொலைக்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டது.
லிங்கனைக் கொலை செய்த பூத் ஏப்ரல் 26, 1865 அன்று விர்ஜீனியாவில் தலைமறைவாக இருந்தபோது பிடிபட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.
லிங்கனுக்குப் பிறகு துணை அதிபர் ஆண்ட்ரூ ஜான்சன் அதிபராகப் பதவியேற்றார்.