‘ஸ்பிரிங்ஃபீல்ட் மிகவும் அழகான நகர். இப்போது நரகமாகிக் கொண்டிருக்கிறது. இது மிகவும் துயரமானது. நான் இருந்தால் இப்படி நடக்காது. இப்போதே சொல்லிக் கொள்கிறேன்’ என்றும் எச்சரித்துள்ளார் டிரம்ப்.
டொனால்ட் டிரம்ப் பேசுகிற பேச்சையும் பிரசாரத்தையும் பார்த்தால் இரண்டாம் உலகப் போர்க் கால இடைத்தங்கல் முகாம்கள்தான் நினைவுக்கு வருகின்றன என்பதாக அமெரிக்க மக்கள் அச்சம் கொள்கின்றனர்.
அமெரிக்காவில் தற்போது சட்டவிரோதமான புலம்பெயர் மக்கள் சுமார் 1.20 கோடி பேர் இருப்பதாகத்தான் மதிப்பிடப்படுகிறது. ஆனால், இந்த எண்ணிக்கையையும் 2 கோடி என்பதாகக் குறிப்பிடுகிறார் டிரம்ப். கொலராடோவில் குடியிருப்புகளை வெனிசுவேலா கூட்டத்தினர் கைப்பற்றுவதாகக் கூறப்படுவதைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘இவர்களை வெளியேற்றுவதுதான் ரத்தக் களரியாகப் போகிறது’ என்கிறார் அவர்.
புலம்பெயர் மக்களைக் கொண்டு தங்களையும் தனது பொருளாதாரத்தையும் அமெரிக்காவிலுள்ள நகரங்கள் புதுப்பித்துக் கொள்வதென்பது வழக்கமான ஒன்றுதான். சுமார் 40 ஆயிரம் மக்கள்தொகை கொண்ட லெவிஸ்டன் நகரம், ஆரம்பத்தில் வெள்ளை இனத்தவரின் எதிர்ப்பு இருந்தபோதிலும்கூட, 1999-ல் தொடங்கிக் கூடுதலாக 12 ஆயிரம் சோமாலியாவைச் சேர்ந்த புலம்பெயர் மக்களைத் தம் மக்களாக உள்வாங்கிக்கொண்டிருக்கிறது. இந்த நகரின் மறு உருவாக்கத்தில் சோமாலியர்கள் எந்த அளவுக்கு இணைந்திருக்கின்றனர் என்பது பாராட்டப்பட்டு வருகிறது.
ஆனால், இந்த உண்மைகளையெல்லாம் – இன்னமும் ஹைதி மக்கள் நாய்களைத் தின்கிறார்கள், பூனைகளைத் தின்கிறார்கள், வாத்துகளைத் தின்கிறார்கள் (இதற்கு அதிபர் வேட்பாளர்டிரம்ப்பும் ஆமாம் போடுகிறார்) என்ற குற்றச்சாட்டுகளைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் டிரம்ப் ஆதரவு தீவிரவாதிகள் (அல்லது அடிப்படைவாதிகள்) ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அல்லாமல் நாய்கள், பூனைகளைக் கொன்று உண்பதற்காக தீயில் சுட வைப்பதைப் போன்றகொடூரமான விடியோக்களையும் புகைப்படங்களையும் – ஸ்பிரிங்ஃபீல்டிலுள்ள ஹைதி மக்களிடமிருந்து கிடைத்தவை என்று குறிப்பிட்டு – பகிர்ந்துகொண்டிருக்கின்றனர்.