அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ், அவரது மனைவி உஷா வான்ஸ் ஆகியோர் இன்று கிரீன்லாந்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தைப் பார்வையிடச் செல்கின்றனர்.
கிரீன்லாந்தில் நடக்கும் நாய் பந்தயத்தைக் காண சுற்றுப்பயணம் செல்வதற்கு உஷா வான்ஸ் முன்பு திட்டமிட்டிருந்தார். பின்னர் ஜேடி வான்ஸ் கிரீன்லாந்து பயணத்தில் இணைவதாகத் தகவல்கள் வெளியாகின. 3 நாள்களுக்கு திட்டமிடப்பட்ட இந்தப் பயணம் பற்றி கிரீன்லாந்து அரசிடம் முன்னறிவிப்பு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, கிரீன்லாந்து மீது அமெரிக்கா கட்டுப்பாடு செலுத்தவேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பலமுறை கூறிய நிலையில் தான் பதவிக்கு வந்தவுடன் கிரீன்லாந்தை அமெரிக்கா வசம் கொண்டுவருவேன் என முன்பு தெரிவித்திருந்தார்.
கிரீன்லாந்து டென்மார்க் நாட்டைச் சேர்ந்த தன்னாட்சி அதிகாரம் உள்ள பிரதேசமாகும். ஐரோப்பிய யூனியனின் கீழ் வரும் இந்தப் பிரதேசத்தை கைப்பற்ற அமெரிக்கா முயற்சி செய்வது அங்குள்ள மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனால், வான்ஸ் வருகைக்கு டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து மக்கள் பலத்த எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர்.