அமெரிக்க வரியால் நெருக்கடி: மத்திய அரசுக்கு எதிராக திருப்பூரில் செப்.2-ல் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம் | DMK and allies to hold protest in Tirupur condemning 50% US Tariff

1374720
Spread the love

சென்னை: திருப்பூரை தொடர்ந்து புறக்கணித்து வரும் மத்திய அரசைக் கண்டித்தும், அமெரிக்க வரி விதிப்பிலிருந்து உடனடி நிவாரண நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வலியுறுத்தியும் ‘மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி’ சார்பில் செப்டம்பர் 2 அன்று திருப்பூர் ரயிலடி அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ‘மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி’ சார்பில் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில், ‘இந்திய பொருட்கள் இறக்குமதி மீது அமெரிக்கா விதித்துள்ள 50% வரி விதிப்பால் கடும் நெருக்கடியையும், பெரும் பாதிப்பினையும் சந்தித்துள்ளது பின்னலாடை தொழிலின் மையமான திருப்பூர். கிட்டத்தட்ட 3000 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதோடு லட்சக்கணக்கான மக்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

பணமதிப்பிழப்பு, முறையற்ற ஜிஎஸ்டி, கொரோனா பேரிடர் என்ற அடுத்தடுத்த தொடர் தாக்குதல்களால் நசிந்துபோயிருந்த திருப்பூர் பின்னலாடை தொழிலானது தற்போது புத்துயிர் பெற்று மீண்டும் பழைய நிலையை எட்டிப்பிடித்து ஆண்டுக்கு 45,000 கோடிக்கும் அதிகமான ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற தொடங்கியது. ஆனால் அதன் மீது விழுந்த பேரிடியாக அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு வந்து விழுந்தது. ஒன்றிய பாஜக அரசின் வெளியுறவுக் கொள்கைகளில் ஏற்பட்ட மோசமான தோல்வியையே இந்த விளைவுகள் காட்டுகின்றன.

திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளர் சங்கங்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, கடந்த 16-ஆம் தேதியே முதல்வர் பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில் தமிழ்நாட்டின் ஜவுளித் துறை கிட்டத்தட்ட 75 இலட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துவருகிறது என்பதை குறிப்பிட்டு, அமெரிக்க வரி விதிப்பின் காரணமாக, 30 இலட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி இருந்தார்.

அமெரிக்க வரி விதிப்பால் ஏற்படப்போகும் பாதிப்புகளை முன்கூட்டியே முதல்வர் சுட்டிக் காட்டி நிவாரண நடவடிக்கைகளை ஒன்றிய பாஜக அரசு மேற்கொள்ள வேண்டும் என எடுத்துரைத்தும் எந்த நிவாரண நடவடிக்கையையும் ஒன்றிய பாஜக அரசு எடுக்கவில்லை.

மீண்டும் ஒருமுறை முதல்வர் வலியுறுத்தியும் கிணற்றில் போட்ட கல் போல அமைதியாய் இருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. ஆபத்து வர போகிறது என்று எச்சரித்தும் அதை எதிர்கொள்ள எந்த நிவாரண நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை ஆபத்து வந்த பின்னும் அதை பற்றி துளியும் கவலையின்றி அமைதியாய் இருக்கிறது ஒன்றிய பாஜக அரசு.

பெரும் முதலாளிகளான அதானி அம்பானிக்கு ஒரு பிரச்சினை என்றால் ஓடோடி வரும் ஒன்றிய பாஜக அரசு, உள்நாட்டில் உள்ள சிறு வணிகர்களின் நலனை கவனத்தில் கொள்வதில்லை. குறிப்பாக தமிழ்நாட்டின் திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களைத் தொடர்ந்து புறக்கணிப்பது ஏன்? பாதிப்புகளை சரி செய்ய முன்வராமல் மௌனம் சாதிப்பது பின்னலாடை ஏற்றுமதியின் மையமான திருப்பூரை முடக்கும் அமெரிக்காவின் சூழ்ச்சிக்கு ஒன்றிய பாஜக அரசும் துணை போகிறதோ? என்ற சந்தேகத்தை உண்டாக்குகிறது.

அமெரிக்கா ஒருபுறம் வரி போட்டு நம்மை முடக்க நினைத்தால் மறுபுறம் வரி நிவாரணம் ஏதும் கொடுக்காமல் ஒன்றிய பாஜக அரசும் நம்மை முடக்கி வருகிறது. அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணியாமல், திருப்பூர் பின்னலாடை தொழில் நிறுவனங்களைப் பாதுகாக்கும் வகையில் உடனடி நிவாரண நடவடிக்கைகளை ஒன்றிய பாஜக அரசு எடுக்க வேண்டும். இதனால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய ஒன்றிய பாஜக அரசு வரி சலுகை உள்ளிட்ட நிவாரண உதவிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் . அமெரிக்க வரி விதிப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்கள் மட்டும் தொழிலாளர்களின் குரலாய் இருந்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி என்றும் போராடும்.

திருப்பூரைத் தொடர்ந்து புறக்கணித்து வரும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும். அமெரிக்க வரி விதிப்பிலிருந்து உடனடி நிவாரண நடவடிக்கைகளை ஒன்றிய பாஜக அரசு மேற்கொள்ள வலியுறுத்தியும் ‘மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி’ சார்பில் செப்.2 அன்று திருப்பூர் ரயிலடி அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்களான துரைமுருகன் (திமுக) , கி.வீரமணி (திராவிடர் கழகம்), கு.செல்வபெருந்தகை (காங்கிரஸ்), வைகோ( மதிமுக), பெ.சண்முகம் ( மார்க்சிஸ்ட்), இரா.முத்தரசன் (இ.கம்யூ.,), தொல்.திருமாவளவன் (விசிக), கே.எம்.காதர்மொய்தீன்( ஐயுஎம்எல்), ஜவாஹிருல்லா( மமக), அருணாசலம் (மநீம), தி.வேல்முருகன் (தவாக), ஈஸ்வரன் ( கொமதேக) ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *