அமெரிக்க வரி விதிப்பால் திருப்பூர் ஜவுளி மையத்தில் ரூ.3000 கோடி ஏற்றுமதி பாதிப்பு: முதல்வர் ஸ்டாலின் | US Tariff hike hits Tiruppur’s textile hub: MK Stalin

1374575
Spread the love

சென்னை: இந்தியப் பொருட்களின் மீதான அமெரிக்க வரி விதிப்பால் தமிழகத்தில் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஒன்றிய அரசிடம் முன்வைத்த கோரிக்கைகளை வலியுறுத்தி, உடனடி நிவாரணம் மற்றும் அமைப்புரீதியான சீர்திருத்தங்கள் மூலம் நமது தொழிற்சாலைகள் மற்றும் பணியாளர்களைக் காக்க வேண்டுகிறேன். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, கடந்த 16-ம் தேதி (ஆக.16) இந்தியப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்கா உயர்த்தியுள்ளதால், தமிழ்நாட்டில் பின்னலாடை உள்ளிட்ட பல்வேறு தொழில் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, வர்த்தகத்தை மீட்டெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

அந்தக் கடிதத்தை சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) சமூகவலைதளப் பதிவொன்று வெளியிட்டுள்ளார்.

அதில் முதல்வர் ஸ்டாலின், “அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு தமிழ்நாட்டின், குறிப்பாகப் பின்னலாடை மையமான திருப்பூரின், ஏற்றுமதி வர்த்தகத்தினைப் பெரிதும் பாதித்துள்ளது. ஆண்டுக்கு 3000 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பதோடு, பல்லாயிரக்கணக்கானோரின் வேலைவாய்ப்பும் இதனால் பாதிப்படைந்துள்ளது.

இந்நிலையில், ஒன்றிய அரசிடம் முன்வைத்த கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்துகிறேன். உடனடி நிவாரணம் மற்றும் அமைப்புரீதியான சீர்திருத்தங்கள் மூலம் நமது தொழிற்சாலைகள் மற்றும் பணியாளர்களைக் காக்க வேண்டுகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

‘ஏற்றுமதி 70 சதவீதம் அளவுக்கு குறையும்’ – இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு புதன்கிழமை (ஆக.27) அமலுக்கு வந்தது. ஏற்கெனவே விதித்த 25 சதவீத வரியோடு இந்த கூடுதல் 25 சதவீதமும் சேர்ந்துள்ள நிலையில், 50 சதவீத வரி விதிப்பு இந்தியாவின் ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கும். இதனால், தொழிலாளர் சார்ந்த துறைகள் ஏற்றுமதி 70 சதவீதம் அளவுக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தியப் பொருட்களின் மீதான அமெரிக்க வரி விதிப்பால் தமிழகத்தில் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு மத்திய அரசின் நடவடிக்கையை கோரியுள்ளது கவனம் பெற்றுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *