“அமைச்சரவையை பங்கு போட்டுக் கொள்வது மட்டுமே ஆட்சிப் பகிர்வு அல்ல” – கே.பாலகிருஷ்ணன் | Sharing the cabinet is not the sharing of power says k Balakrishnan

1317213.jpg
Spread the love

திருவண்ணாமலை: “அதிகார பகிர்வு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறிவரும் நிலையில், “மந்திரி சபையை பங்கு போட்டு கொள்வது மட்டுமே ஆட்சி பகிர்வு அல்ல” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் 9-வது மாநில மாநாடு திருவண்ணாமலையில் இன்று (செப். 26) நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறும்போது, “இந்தியாவில் பல அரசியல் கட்சி தலைவர்கள், முதல்வர்கள், அமைச்சர்கள் உட்பட பல பேரை பாஜக அரசாங்கம் பழிவாங்கும் நோக்கில் அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் வழக்குகளை பதிவு செய்து சிறையில் அடைக்கும் கொடுமை தொடர்ந்து நடைபெறுகிறது. ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் அமைச்சர் மணீஷ் சிசோடியா ஆகியோர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டனர். அவர்களை உச்ச நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்துள்ளது. இதேபோல் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

வழக்கை திரும்ப பெற சொல்லவில்லை: நியாயப்படி வழக்கு நடைபெற்று, நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் நடவடிக்கை என்பது நியாயம். வழக்கு விசாரணை நடைபெறாமல், குற்றச்சாட்டுகளை முறையாக பதிவு செய்யாமல் மாத கணக்கில் சிறையில் அடைக்க என்ன அவசியம் இருக்கு?. தங்களுக்கு பிடிக்காத நபர்களை பழிதீர்க்கும் நோக்கத்துடன் பாஜக செயல்படுவது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. செந்தில்பாலாஜி மீது உள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என கூறவில்லை. வழக்கு விசாரணை நடைபெறட்டும். நீதிமன்ற முடிவுக்கு எல்லோரும் கட்டுப்படுவோம்.

நீதிமன்றம் தண்டனை வழங்குவதற்கு முன்பாக ஜாமீன் வழங்காமல் 471 நாட்கள் சிறையில் அடைப்பது என்பது தண்டனை கொடுத்தது போல் உள்ளது. நீதிமன்றம் தண்டனை வழங்குவதற்கு முன்பு, அரசாங்கம் தண்டனை வழங்குவது போல்தான் உள்ளது. சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா என்ற கேள்வி எழுகிறது. மனித உரிமை மற்றும் ஜனநாயக உரிமையை பறிக்கின்ற ஆட்சியை தான் மத்திய அரசு நடத்துகிறது. ஜாமீன் வழங்கிய பிறகு என்ன செய்ய போகிறார்கள் என தெரியவில்லை. மத்திய அரசு தனது செயலை மாற்றிக் கொள்ள வேண்டும்.

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்: தமிழகத்தில் சாம்சங் தொழிலாளர்கள் உரிமைகளை கேட்டு பல நாட்களாக போராடி வருகின்றனர். அந்நிய நாட்டு மூலதனம் தமிழகத்துக்கு வருதும், தொழில் தொடங்குவது, வேலைவாய்ப்பு வழங்குவது நல்லதுதான். ஆனால், தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க உரிமையை கொடுக்க அந்நிய நாட்டு நிறுவனம் மறுப்பதை ஏற்க முடியாது. தொழிலாளர்களுக்கு நன்மை கிடைக்காத அந்நிய நாட்டு நிறுவனம், யாருக்கு நன்மை கிடைக்கும் என்ற கேள்வி எழுகிறது.தொழிலாளர்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய தொழிற்சங்க உரிமையை தமிழக அரசு வழங்க வேண்டும் என வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

தமிழகத்தில் அதிகார பகிர்வு வேண்டுமா? ஆட்சிக்கு வர வேண்டுமா? என்ற சர்ச்சை எழுந்துள்ளது. திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி சில பிரச்சினைகளை எழுப்புவதை பார்க்கின்றோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை இன்றைய சூழ்நிலையில் இந்த சர்ச்சை தேவையில்லை, அவசியமற்றது என்பதுதான் கருத்து. ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் அரசியல் கட்சிகள் செயல்படும். அதிகாரத்துக்கு எப்போது வருவது, ஆட்சிக்கு எப்போது வருவது என்பதுதான் கேள்வி. ஆனால், இன்றைய சூழ்நிலையில் நேரடியாக அதிகாரத்துக்கு வந்திட முடியுமா என்பது கேள்விக்குறி. பாஜகவை எதிர்த்து திமுக கூட்டணியில் உறுதியான போராட்டத்தை நடத்தி வருகிறோம்.

அதிகார பகிர்வு என்றால் என்ன?: மக்களவை தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, இந்தியாவுக்கு முன் உதாரணமாக உள்ளோம். கூட்டணியில் குழப்பத்தை உருவாக்க பாஜக பலவிதமான முயற்சிகளை செய்யக்கூடும். இதற்கு தீனி போடும் வகையில் சர்ச்சைகளுக்கு இடமளித்து விடக்கூடாது. மந்திரி சபையை பங்கு போடுவது மட்டுமே ஆட்சி பகிர்வு அல்ல. மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்கி, இந்த செயல்திட்டத்தை அமலாக்க கட்சிகளை ஒன்றாக சேர்த்து, தேர்தல் கூட்டணியை அமைத்து வெற்றி பெற்று ஆட்சியில் அமர்வது என்பதுதான் அதிகார பகிர்வாக கருதுகிறோம். இந்திய நாடு வளர்ச்சி அடையவில்லை. கார்ப்பரேட் முதலாளிகள் வளர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அரசு பணியில் இருப்பவர்களை விட, ஓய்வு பெறுபவர்கள் அதிகரித்துள்ளனர். ஓய்வு பெறுபவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. முதியோர்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது போல் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *