அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கார் விபத்தில் சிக்கி படுகாயம்

17155195403061
Spread the love

தமிழக அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் மகன் கம்பன். இவர் இன்று(12ந்தேதி) பிற்பகல் கார் டிரைவர் ஆனந்தன், உதவியாளர் பரசுராமன் ஆகியோருடன் சொகுசு காரில் பயணம் செய்தார்.
திருவண்ணாமலை அருகே ஏந்தல் புறவழிச்சாலை (வேலூர் -கடலூர் தேசிய நெடுஞ்சாலை) நான்குமுனை சந்திப்பின் ஒரு பகுதியை கடந்து, மற்றொரு பகுதிக்கு கார் சென்றது.

நேருக்கு நேர் மோதியது

அந்த நேரத்தில் திருக்கோவிலூர் மார்க்க சாலையில் இருந்து வந்த சொகுசு காரும்,அமைச்சர் மகன் பயணம் செய்த காரும் நேருக்கு நேர் மோதியது.

இதில் அமைச்சரின் மகன் கம்பன் இருந்த சொகுசு கார் உருண்டு பலத்த சேதமடைந்தது.மேலும் காரின் பின்பக்க டயர் வெடித்ததாக கூறப்படுகிறது. இதேபோல், விழுப்புரம் மார்க்க சாலையில் வந்தகாரின் முன்பகுதியும் பலத்த சேதம் அடைந்தது.

அமைச்சர் எ.வ.வேலுவின் மகன்

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த அமைச்சர் எ.வ.வேலு மகன் கம்பன், அவரது கார் டிரைவர் ஆனந்தன், உதவியாளர் பரசுராமன் ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு தென்மாத்தூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதேபோல், விழுப்புரம் மார்க்க சாலையில் வந்த காரில் பயணம்செய்த சென்னை அடுத்த அயப்பாக்கம் பகுதியில் வசிக்கும் சுந்தரமூர்த்தி (62) என்பவரும் படுகாயம் அடைந்தார்.அவர்,திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.அமைச்சர் மகனின் கார் விபத்தில் சிக்கியதால் உடனடியாக காரில் இருந்த கட்சி கொடி மற்றும் அதன் பதிவு எண் பிளேட்டுகளை போலீசார் அகற்றினர்.

கண்காணிப்பு கேமரா காட்சி

அமைச்சரின் மகன் கம்பன், தென்மாத்தூரில் உள்ள தனது கல்லூரி வளாகத்தில் இருந்து திருவண்ணாமலை, திண்டிவனம் சாலையில் உள்ள வீட்டுக்கு காரில் சென்றபோது, விபத்தில் சிக்கி இருப்பது விசாரணையில் தெரியவந்து உள்ளது. இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே அமைச்சர் மகன் சென்ற கார் விபத்தில் சிக்கியகாட்சி அப்பகுதியில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சி தற்போது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *