அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வீட்டு மனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் ஆக.27-ல் குற்றச்சாட்டுப் பதிவு | housing plot allotment case against Minister IPeriyasamy adjourned on August 27

1298131.jpg
Spread the love

சென்னை: வீட்டு மனை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு செய்ததாக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் வரும் ஆகஸ்ட் 27-ம் தேதியன்று குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான ஜாபர்சேட்டின் மனைவி பர்வீன் உள்பட சிலருக்கு திருவான்மியூரில் 3 ஆயிரத்து 457 சதுர அடி மற்றும் 4 ஆயிரத்து 763 சதுர அடி கொண்ட வீட்டுமனைகளை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. இந்த நிலங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டி கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்ததாக அப்போது வீட்டு வசதித் துறை அமைச்சராக பதவி வகித்த தற்போதைய அமைச்சர் ஐ.பெரியசாமி, ஜாபர் சேட், அவரது மனைவி பர்வீன், க.முருகையா, கே.ராஜமாணிக்கம், ஆர்.துர்கா, சங்கர் ஆகிய 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடந்த 2013-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி தவிர மற்றவர்களில் சிலரை விடுவித்தும், சிலர் மீதான வழக்கை ரத்து செய்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பில் நேரில் ஆஜராக விலக்கு அளிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதையேற்ற நீதிபதி, இந்த வழக்கை குற்றச்சாட்டுப் பதிவுக்காக வரும் ஆகஸ்ட் 27-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் ஆஜராகவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *