அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு அக்.4-க்கு ஒத்திவைப்பு | asset hoarding case against Minister KKSS Ramachandran hearing adjourned to Oct 4

1308343.jpg
Spread the love

ஸ்ரீவில்லிபுத்தூர்: மறு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததை அடுத்து, அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு அக்டோபர் 4-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த 2006 – 2011 திமுக ஆட்சிக்காலத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சாத்தூர் ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, நண்பர் சண்முக மூர்த்தி ஆகிய மூன்று பேர் மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.44.59 லட்சம் சொத்து சேர்த்ததாக விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த 2012-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வழக்குப் பதிவு செய்தனர். அதே ஆண்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, ஶ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி கடந்த 2016-ம் ஆண்டு திமுக ஆட்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழக்கு தொடர்ந்தார். அதில் லஞ்ச ஒழிப்புத் துறை சில வருவாய் ஆதாரங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை எனக் கூறி, 28 வருவாய் விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்நிலையில் 2019-ம் ஆண்டு இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அதன்பின் மீண்டும் மாவட்ட நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது.

லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தாக்கல் செய்த 28 வருவாய் விவரங்கள் குறித்து மீண்டும் மீண்டும் விசாரணை நடத்தி அதில் 10 வருவாய் இனங்களை ஏற்றுக் கொண்டு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி மற்றும் சண்முக மூர்த்தி ஆகியோரை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார். இதே நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த சொத்துக் குறிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி இருவரும் 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் விடுவிக்கப்பட்டனர்.

இந்த இரு வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் தாமாக முன்வந்து சீராய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்தார். இந்த வழக்கில் ஆகஸ்ட் 7-ம் தேதி சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர்கள் உள்ளிட்டோரை விடுவித்தது செல்லாது என தீர்ப்பளித்தார். மேலும், இந்த வழக்கை விசாரணை நீதிமன்றம் மீண்டும் விசாரிக்கவும், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் செப்டம்பர் 9-ம் தேதியும், அமைச்சர் தங்கம் தென்னரசு 11-ம் தேதியும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கு ஆவணங்கள் கடந்த வாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு வந்தன.

இதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கு விசாரணைக்கு தடை கோரி அமைச்சர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்த வழக்கு இன்று (செப்.9) ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அமைச்சர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மாரியப்பன், வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த ஆணையை சமர்ப்பித்து, வழக்கை விசாரிக்கக் கூடாது என வாதிட்டார். இதையடுத்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

…………

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *