அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை கோரிய மனு தள்ளுபடி | Dismissal as petition seeking stay of trial against Minister Senthil Balaji was withdrawn

1339806.jpg
Spread the love

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு விசாரணைக்கு தடை கோரிய மனு வாபஸ் பெறப்பட்டதால், அதை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆர்.அரவிந்த் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தபோது உரிய வழிகாட்டு விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை. எனவே அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். அதேபோல இந்த வழக்கை விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்,” எனக் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது எந்த அடிப்படையில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளீர்கள் என மனுதாரருக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பில், அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு, அவருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதால் தனிப்பட்ட முறையில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்குக்கு சம்பந்தமே இல்லாத மூன்றாவது நபர் வழக்கு விசாரணைக்கு தடை கோரி மனு தாக்கல் செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், இந்த மனுவை திரும்பப்பெறவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என மனுதாரருக்கு எச்சரிக்கை விடுத்தனர். அதையடுத்து மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *